பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

காணப்படுகிறது எனக் கூறி நன்றியுணர்வு பொங்க என் முகத்தைப் பார்த்தார். பிற சமயத்தவர் அன்பையும் நம்பிக்கையையும் பெற எந்த அளவுக்குச் சமய நல்லிணக்க உணர்வோடும் மனித நேயத்தோடும் முன்னோடிப் பணியை ஆற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார் உமர் (ரலி) போன்ற மாமனிதர்கள் என்பதை நினைக்கும்தோறும், நாமும் அவர்களின் வாழ்க்கை நெறி வழி ஒழுகி வாழ வேண்டும் என்ற வேட்கை நம்முள் பொங்கியெழவே செய்கிறது.

இதைச் சொல்லுகின்றபோது மற்றுமொரு வரலாற்றுச் சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.

உமர் (ரலி) காட்டிய உன்னதச் சமயப் பொறை

ஒரு முறை இரண்டாவது கலீஃபாவாக ஆட்சி செய்துவந்த மாமனிதர் உமர் (ரலி) அவர்கள் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த இடம் ஒரு மாதா கோவில். அப்போது அவர்கள் நண்பகல் தொழுகையான 'லுஹர்' தொழுகையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. எனவே, தனக்கு மாதா கோவிலைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த பாதிரிமார்களிடம் தான் தொழுகை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகையால் விரைந்து சென்று தொழுகை நடத்த வேண்டும் எனக் கூறி விழைந்தார்.

இதையறிந்த பாதிரிகள், உமர் (ரலி) அவர்கள் விரும்பினால் மாதா கோயில் பகுதியிலேயே தங்கள் தொழுகையை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறி அவர் மறுமொழிக்காகப் பாதிரிமார்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

தேவாலயத்துள் தொழாமல் வெளியே சென்று தொழுகை நடத்த விரும்புவதாக உமர் (ரலி) கூறியதைக் கேட்ட தலைமைப் பாதிரியார்,