பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தொடங்கப்பட்ட இவ்விழாவின் முக்கியத்துவம் காலப்போக்கில் இப்போது வெகுவாக உணரப்பட்டு வருகிறது. அதன் இன்றியமையாத தேவை நாளுக்கு நாள் வலுவாக அறியப்பட்டு வருகிறது.

நம்மைப் பொறுத்தவரை ஆண்டு முழுமையும் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் நினைவுகூரப்படுவதோடு, அதனை முழுமையாக வாழ்வில் கடைப்பிடிக்கப்படவும் வேண்டும். இம்மாதிரி விழாக்களின் போது, அதை ஆண்டுக்கொரு முறை கணக்கெடுத்து லாப, நட்டமறியும் காலமாகக் கருத வேண்டும். சென்ற மீலாதிலிருந்து, இந்த மீலாதுவரை பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் எந்த அளவுக்குப் பின்பற்றியொழுகி வாழ்ந்திருக்கிறோம், எங்கெங்கே சறுக்கியிருக்கிறோம்; வழுக்கியிருக்கிறோம், அதற்கு உள்ள காரணம், அக்காரணங்களை அடித்தளமாகக் கொண்டு, இவ்வாண்டில் நேரிய முறையில் பெருமானாரின் பெரு வாழ்வு ஒளியில் வாழ்ந்து வளம் பெறுவது எப்படி என்ற சிந்தனையின் அடிப்படையில் செயல்படுவது பற்றி ஆயும் நாளாக - உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாக இந்நாளைக் கருதுதல் வேண்டும்.

மீலாது விழா காலக் கட்டாயம்

சவூதி அரேபியாவிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும் பெருமானார் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழா 'மீலாது பெருவிழா' வாகக் கொண்டாடப்படுவது இல்லைதான். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மைச் சமுதாயத்தினராக முஸ்லிம்கள் பெரும்பான்மை ஹிந்து சமயத்தவரிடையே வாழுகின்ற நிலையில் தங்கள் மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகளை பிற சமய மக்களும் அறிந்து கொள்ள, உணர்ந்து தெளிய வாய்ப்பேற்படுத்தும் வகையில் இம்மாதிரி 'மீலாது விழா'க்களைக் கொண்டாடுவது அவசியமாகவும் ஒரு வகையில் காலக் கட்டாயமாகவும் அமைந்துள்ளதெனலாம்.