பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

மரியாதை செய்ய வேண்டுமா? என நபித் தோழர்களில் ஒருவர் வினாத் தொடுத்ததற்கு இறந்தவர் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவரும் ஆதாம் வழி வந்த நம் சகோதரரே. ஒரு சகோதரர் மற்றொரு சகோதரருக்குச் செய்ய வேண்டிய மரியாதையைத்தான் நான் செய்தேன். உங்களையும் செய்யச் சொன்னேன்” என்றார்.

இதுதான் மனித நேயம். இந்த மனித நேய உணர்வு இருக்கின்றபோது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனிதத்துவத்தைக் காண்பானேயல்லாது, மனிதனுக்குள் இருக்கும் வெறும் சாஸ்திர சம்பிரதாய மதவுணர்வுகளைப் பார்க்க மாட்டான்; அவையெல்லாம் மனித நேய உணர்வுக்கு அப்புறம்தான். இதுதான் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நமக்குப்போதித்த, வாழ்ந்து வழி காட்டிச் சென்ற வாழ்வியல் முறை.

இஸ்லாமிய நெறிமுறை வழுவா வாழ்வே
இணையிலாப் பிரச்சாரமாகும்

இந்த உன்னதமான வாழ்க்கை முறையைப் பெருமானாரின் பெரு வாழ்வை அறிந்தவனாக ஒவ்வொரு முஸ்லிமும் இருப்பதோடு, மற்றவர்களையும் அறிந்துணரச் செய்ய வேண்டும். இதற்காக பிற மதத்தினருக்கிடையே சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து புரிய வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய நெறிமுறை வழுவாது வாழும் முறையைக் கண்ணுறும் ஒவ்வொரு சகோதரச் சமயத்தவரும் அவ்வாழ்க்கை முறையின் சிறப்பை - உயர்வை உணர வேண்டும். தாங்களும் அதைப் போன்ற வாழ்க்கைப் போக்கைப் பேண வேண்டும் என்ற வேட்கை கொள்வார்கள். இவ்வுணர்வே இஸ்லாத்தின்பால் அவர்களின் ஈர்ப்பையும் பின் அதுவே இணைப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்தும்.