பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

முடியவில்லை, ஏதேனும் பழைய போர்வை இருந்தால் தரும்படி வேண்டினார்.

இதைக் கேட்ட பாத்திமா மகிழ்வோடு வீட்டிற்குள் சென்று புத்தம் புதிய சிறு போர்வையொன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். முதியவர் அதை வாங்கிப் போர்த்திக் கொண்டு அளவிலா மகிழ்வோடு சென்றார்.

பள்ளியிலிருந்து திரும்பிய அண்ணல் நபி (சல்) அவர்களும் மருகர் அலி (ரலி) அவர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் இஸ்லாமிய மரபுப்படி மறுநாள் மணமகள் தன் பிறந்தகத்தைவிட்டு புகுந்தகம் செல்ல வேண்டும். இதற்காக பெண் வீட்டார் சீதனமாக பெருமானார் (சல்) அவர்கள் அளித்த ஒருசில பொருட்களை எடுத்துக் கொண்டு பாத்திமா நாச்சியார் புறப்படலானார்.

அப்போது தன் அன்பு மகளுக்குச் சிறப்புத் திருமண பரிசாக வாங்கிக் கொடுத்திருந்த அழகான சிறு மேலங்கியை அணிந்து செல்லுமாறு கூறினார். இதைக் கேட்ட பாத்திமா நாச்சியார் சற்றுமுன்புதான் குளிரால் வாடிய வறியவர் ஒருவர்க்கு அதைப் போர்த்திக் கொள்ளத் தந்ததாகக் கூறினார்.

இதைக் கேட்ட பெருமானார் உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவராக, மேலும் தம் மகளாரை நோக்கி கேள்வி எழுப்பலானார்.

“முதியவரின் குளிரைப் போக்க போர்வை தானம் செய்ய வேண்டுமென்றால் வேறு எதையேனும் பழையவற்றைக் கொடுத்திருக்கக் கூடாதா? எந்த வசதியும் இல்லாத நான், உன் திருமணத்திற்குப் பெரும் பரிசு எதையும் வாங்கித் தர இயலவில்லை. என் வசதிக்குறைவிற்கேற்ப ஒரு குப்பாயமாகிய சிறு மேலங்கியை வாங்கித் தந்திருந்தேன். உன் கணவன் வீட்டிற்கு முதன் முதலாக மணப்பெண்ணாகப் புறப்பட்டுச் செல்லும் இத்தருணத்தில்

10