பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

மறவாதிருக்க, அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து இழையோடச் செய்ய நீங்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் நிலைக்களனாக இத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் அமைந்துள்ளது என்பதை தலைவரின் தலைமையுரையிலிருந்தும் வரவேற்புரையாற்றிய சகோதரி திருமதி காந்திமதி துரைராஜ் அவர்களின் பேச்சிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது. இக்கழகத்தின் சார்பில் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதை அறிந்து மகிழ்கிறேன். ஏனெனில் மீலாது விழாவைப் போல் அனைத்துச் சமயத்தவர்களும் கொண்டாடத்தக்க பொதுவிழா பொங்கல்விழா.

பொங்கல் விழா தமிழர் தேசியத் திருவிழா

பொங்கல் விழா தமிழ் மண்ணுக்கே சொந்தமான தேசியத் திருவிழா. தை முதல் நாளன்று பூக்கும் பொங்கல் விழா, மதச் சார்பு அறவே இல்லாத அறுவடைத் திருநாள். மாட்டுக்கும் கலப்பைக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். தமிழ் மண்ணுக்கே சொந்தமான பழம்பெரு விழா. புராணத் தொடர்போ சமயச் சடங்குகளோ அறவே இல்லாத தேசியத் திருவிழா. இன்னும் சொல்லப் போனால் கடல் கடந்து துபாய் போன்ற நாடுகளிலே வாழ நேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமைத் திருநாளாகவும் இப் பொங்கல் திருநாளை பல்வேறு நாடுகளில் சென்று வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இம்மாதிரி விழாக்கள் தமிழ் மொழியையும் மொழி அடிப்படையிலான தமிழ்ப் பண்பாட்டையும் மறக்காமலிருப்பதோடு போற்றி வளர்க்கவும் வளப்பமடையச் செய்யவும் வழியாயமைகிறது.

தமிழ் உணர்வுகளை ஊட்டி வளர்க்கும் இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்படாத காரணத்தாலேயே மொரீஷியஸ் போன்ற நாடுகளிலே வாழும் தமிழர்கள் தமிழை மறந்து, பேசவும் எழுதவும் இயலாதவர்களாக,