158
கொள்வதில்லை. இது சங்க அங்கத்தவர்கள் பலருக்கும் தெரியும்.
ஒரு சமயம் ஹாஜி எஸ். எம். சுலைமான், ஐ. ஏ. எஸ். அவர்கள் சங்கத் தலைவரானார். அவர் என்னிடம் பேரன்பு கொண்டவர். நான் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத காரணம் அறிந்தவரும் கூட.
ஒரு சமயம் அச்சங்கம் சென்னை இம்பீரியல் ஹோட்டலில் 'ஈது கெட் டுகெதர்' கூட்டத்தை நடத்தியது. சங்கத் தலைவர் ஹாஜி சுலைமான் விழா தொடங்குவதற்கு முன்பு விழா நடக்கும் இடத்திற்கு விரைந்து வர வேண்டும் என்றும் மிக முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என்றும் மிக அவசரம் என்றும் கூறி என்னை வரச் சொன்னார். நானும் ஏதோ அவசரம் போலும் என்று கருதி கூட்டம் நடைபெறும் ஹாலுக்குள் நுழையவும் கூட்டம் தொடங்கவும் சரியாக இருந்தது.
என்னை ஆவலோடு வரவேற்ற தலைவர் ஹாஜி சுலைமான் அன்போடு வரவேற்ற கையோடு மேடைக்கு அழைக்க, நான் மறுத்தும் விடாது 'அழைத்து' என்று சொல்வதைவிட 'இழுத்து'ச் சென்று மேடையில் அமர்த்தினார் என்றே கூற வேண்டும். நானும் கௌரவம் கருதி அமைதியாய் அவருடன் மேடையில் அமர்ந்தேன்.
வரவேற்புரை முடிந்த கையோடு தலைமயுரையாற்றிய ஹாஜி சுலைமான், இன்றையக் கூட்டத்தில் உரையாற்ற மணவை முஸ்தபா வந்திருக்கிறார் எனக் கூறி, என்னைப் பற்றி முகமனாக பல செய்திகளைச் சொல்லி என்னைப் பேச அழைத்தார். நான் பேச எழுந்தவுடன் மேடையில் அமர்ந் திருந்த முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி பஷீர் அஹமது சையத் அவர்கள், என்னை ஓரளவு நன்கு அறிந்தவருங்கூட, என்னை நோக்கிச் சற்று உரத்த குரலில் “எந்த மொழியில் பேசப் போகிறீர்கள்?" என வினாவெழுப்பினார்.