பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சொல்லியிருப்பார், அவரது வழித் தோன்றல் தங்கள் காலத்தில் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டவைகளையும் இணைத்துத் தங்கள் சந்ததியினருக்கும் கற்றுக் கொடுத்திருப்பார். இவ்வாறு வழிவழியாக வந்த பண்பாடுகளில் உலகிலேயே மிக மூத்த பண்பாடு என்று எடுத்துக் கொண்டால் அது தமிழ்ப் பண்பாடாகவே இருக்கவியலும்.

நான் இவ்வாறு உறுதிபடக்கூறுவதால் வெறும் தமிழ்ப்பற்றால் கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம். நம்மைப்பற்றி நாமே இன்னும் சரியாகத் தெரியாமலும் புரியாமலும் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

பண்பாட்டின் நிலைக்களனான சங்க இலக்கியம்

பழந்தமிழ்ப் பண்பாடுகளின் நிலைக்களனாக இருப்பவை நம் சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்களிலே சமயச் செய்திகளையோ சமயச் சடங்கு முறைகளையோ காண முடியவில்லை. குறிப்பிட்ட கடவுளர்களைப் பற்றிய குறிப்புகளைக் கூட காண முடியவில்லை. கடவுளை ‘கந்தழி' என்ற சொல்லால் குறிக்கிறான். ‘கட்டற்றது' என்பது அதன் பொருளாகும். 'கடவுள்' என்ற சொல்கூட 'அனைத்தையும் கடந்து நிற்பது' என்ற பொருளிலேயே கையாளப்பட்டு வருகிறது. பழந்தமிழனின் கடவுட் கொள்கை 'ஒருவனே தேவன்' என்பதாகும். அவனது சமுதாயக் கொள்கை 'ஒன்றே குலம்’ என்பதாகவே இருந்தது என்பதை இன்றும் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்பிக் கொண்டுள்ளன. எதார்த்தவானாக வாழ்ந்த அன்றையத் தமிழன் கடைப்பிடித்த பண்பாடுகளையே இன்றும் 'சங்கப் பண்பாடு' எனப் போற்றுகிறோம். அதன் அடித்தளங்கள் இன்றும் நம் வாழ்வில் இழையோடிக் கொண்டுள்ளன என்பது நாமே அறிந்துணராத உண்மைகள். இந்த உண்மை உரத்த குரலில் ஆதாரப்பூர்வமாக உலகத்துக்கு உணர்த்த வேண்டும் என்ற விழைவு 1978 ஆம் ஆண்டில் முழு வீச்சாக என்னுள் எழுந்தது.