பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

ம.பொ.சி சிறப்பிதழை வெளியிட்டுப் பேசியது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி மகிழ்ந்தேன்.

அறிவியல் தமிழ்

தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் வானளாவப் புகழத் தெரிந்த அளவுக்கு அதன் ஆற்றலை உணரத் தவறிவிட்டோம். தமிழைப் பொருத்தவரை அன்றையக் காலப் போக்குக்கும் தேவைக்குமேற்ப இலக்கியத் தமிழாக, சமயத் தமிழாக, தத்துவத் தமிழாக வளர்ந்த போதிலும் அடிப்படையில் தமிழ் அறிவியல் மொழியாக அறிவியலை விளக்குவதற்கேற்ற மொழியாக அமைந்துள்ளதைக் கடந்த நாற்பதாண்டுகளாக உணர்ந்து, தெளிந்து, அதற்கேற்ப அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கும் பெரும்பணியை ஆற்றி வருகிறேன்.

அழியாததற்கு அடிப்படைக் காரணம்

எத்தனையோ பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டை அழிக்க முனைந்தும் தமிழ்ப் பண்பாடு தன் தனித்தன்மை சிறிதும் குன்றாமல் இன்றும் வாழும் பண்பாடாக மக்களின் வாழ்வில் ஊடாடி வாழ்ந்து வருகிறது. அதே போன்று எத்தனையோ மொழிகள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்ற போதிலும் தமிழ் அழியாமல், சிதையாமல் இன்று, வலுவோடும் வனப்போடும் இயங்கும் மொழியாக இருப்பதற்குக் காரணம் ஆழமான அடித்தளத்தில் அவை உருவாகி இருப்பதுதான் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டு வருகிறது.

ஐந்து அறிவியல் கலைச்சொற்களஞ்சிய அகராதிகளை என்னால் வெளியிட முடிந்ததென்றால், ஐந்து லட்சத்திற்கு மேல் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்க முடிந்ததென்றால், அதற்கு என் திறமை மட்டும் காரணமல்ல; தமிழுக்கே இயல்பாயமைந்துள்ள ஆற்றலே அதற்குக் காரணம் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.