பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அப்போதுதான் வாழ்வின் வெற்றிக் கனிகளை எளிதில் எட்ட முடியும். எந்த மனிதனும் இருவகைகளில் செயல் படக் கூடியவனாக இருக்கிறான். ஒன்று தனிமனிதன்; மற்றொன்று ‘சமுதாய மனிதன்'. மனித சுதந்திரமும் தனி மனித சுதந்திரம், சமுதாய மனித சுதந்திரம் என இருபெரும் பிரிவுகளுக்குள் அடங்குகிறது எனலாம். ஒரு மனிதன் தன் வீட்டிலிருக்கும்போது அவனுக்கு எல்லா விதமான சுதந்திரம் உண்டு. அதை அவனளவில் எப்படி வேண்டுமானாலும் அனுபவித்து மகிழலாம். எப்படி வேண்டு மானாலும் உடையணியலாம், இல்லாமலும்கூட இருக்கலாம். தனக்கு விருப்பமானவற்றை தனக்குப் பிடிக்கும் வகையில் உண்ணலாம். பருகலாம். புகைக்கலாம். தன் வழிபாட்டு முறை எதுவாயினும் அம்முறையிலேயே சடங்கு சம்பிரதாயங்களோடு செய்து கொள்ள முழுச் சுதந்திரம் உண்டு. வழிபாட்டுச் சுதந்திரம் என்ற முறையில் அவன் சுதந்திரம் கோயில், மசூதி, சர்ச், குருத்வாரா, ஜெபாலயம், பெளத்த மடம் என அவரவர் சமயச் சார்பான வழிபாட்டுத் தல வளாகங்கள்வரை மத அடிப்படையிலான சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை படைத்தவர்களாக உள்ளனர். இப்பகுதிகளெல்லாம் அவரவர் சமயச் சார்பான வரையறைகளோடு கூடிய தனிப் பகுதிகளாகும். இங்கே அவரவர் சமயச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க அந்தந்த மதத்தவர்கட்கு முழுச் சுதந்திரம் உண்டு.

ஆனால் அதே மனிதன் தன் வீட்டைவிட்டு, தன் சமய வளாகத்தை விட்டு அனைவரும் உலவும் சமுதாயப் பொதுச் சாலைக்கு வந்து விட்டானென்றால் அவன் பொது மனிதனாக-சமுதாய மனிதனாக மாறிவிடுகிறான்.

சமுதாயவீதி என்பது பலதரப்பட்ட மனிதர்கள் உலவும் இடம். அங்கே பல்வேறு சிந்தனைகள், சித்தாந்தக் கோட் பாடுகள், நடையுடை பாவனையுடையவர்கள் உலவும்