பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

அப்படிப்பட்டவருடைய பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் உரிமையும் தகுதியும் மற்றவர்களைவிட உங்களுக்கே அதிகம் என்பதில் ஐயமில்லை.

உழைப்பாளரின் 'சொர்க்க' முன்னுரிமை

இச் சந்தர்ப்பத்தில் பெருமானாருடைய பெருவாழ்வில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுவது சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒருவர் பள்ளிவாசலில் உண்ணும் நேரம், உறங்கும் நேரம் போக மீதமுள்ள நேரமெல்லாம் தொழுது கொண்டேயிருப்பார். ஆனால், அவருடைய சகோதரர் வக்து நேரத்திற்கு - தொழுகை நேரத்திற்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருவார். பர்ளு தொழுகையை மட்டும் தொழுது விட்டு அவசர அவசரமாக வெளியேறி விடுவார். இது நீண்ட நாட்களாகப் பள்ளி வாசலில் நடந்துவரும் நிகழ்ச்சி. இதை ஒரு சஹாபி - நபித் தோழர் கவனித்துக் கொண்டே வந்தார்.

ஒரு நாள் அவர் அண்ணல் நபி (சல்) அவர்களிடத்தில் இதைப் பற்றிய ஐயத்தைக் கேள்வி வடிவில் கேட்டார்: “அல்லாஹ்வின் இறைத்துதர் அவர்களே! ஒருவர் பள்ளி வந்து தொழுது கொண்டேயிருக்கிறார். உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வெளியே செல்கிறார். மற்ற நேரமெல்லாம் இறை வணக்கம்தான். மற்றொருவர் அவருடைய சகோதரர். அவர் வக்து நேரத்திற்கு மட்டும் பள்ளிக்குத் தொழ வருகிறார். வேகவேகமாகத் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். இந்த இருவரில் யார் சொர்க்கத்திற்கு முதலாவதாகச் செல்பவர்?" என்று வினாவெழுப்புகிறார்.

அப்போது அண்ணலார் அவர்கள் சஹாபியை நோக்கி! “வக்து நேரத்திற்கு மட்டும் தொழுதுவிட்டு செல்கிறாரே அவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டார். "மரம்