பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

யெல்லாம் அறியச் செய்வது கல்வி. திருமறையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பே 'அல் கலம்' (எழுதுகோல்) என்பதாகும்.

நான் இங்குக் குறிப்பிடுவது உலகியல் கல்வி மட்டுமல்ல. முறையாக மார்க்கக் கல்வி பெறுவதிலும்கூட நாம் பின் தங்கியே இருக்கிறோம் என்பதை என்னால் எடுத்துக் கூறாமல் இருக்க முடியவில்லை.

சமுதாய முன்னேற்ற அளவுகோல்

சமுதாய முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கருதப்படும் கல்வியறிவு பெறுவதில் நாம் தாழ்ந்திருப்பதால் நம் சமுதாய மக்களின் முன்னேற்றம் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். போதிய கல்வியறிவு பெறாததால் தேக்க நிலை அடைந்திருக்கிறோம்.

அண்மையில் நான் கெய்ரோவிலிருந்து துபாய் வருகின்றபோது நான் வந்த விமானம் தோஹா விமான தளத்தில் இறங்கியது. நீண்ட நேரம் நின்ற விமானத்திலிருந்து தோஹா பயணிகள் இறங்க துபாய் பயணிகள் விமானத்திலேயே அமர்ந்திருந்தோம். அப்போது விமானத்தைச் சுத்தப்படுத்த சில இளைஞர்கள் உரிய சாதனங்களுடன் வந்தனர். அவர்கள் தமிழில் பேசிக் கொண்டதால் 'நீங்களெல்லாம் எந்த ஊர்?’ என்று கேட்டேன். உடனே அந்த இளைஞர்கள் ஏதோ நான் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட்டாற்போல, அரபியில் சில வார்த்தைகளையும், இந்தியில் சில வார்த்தைகளையும் உச்சரித்தவர்களாக விரைந்து சென்று விட்டார்கள் என்று சொல்வதை விட ஓடிவிட்டார்கள். தேள் கொட்டியவர்களைப் போல் ஏன் இந்த இளைஞர்கள் இப்படி ஓடுகிறார்கள்? தொடக்கத்தில் எனக்குப் புரியாவிட்டாலும் பிறகு இதற்கான காரணம் எனக்குத் தெளிவாகப் புரியவே செய்தது.