பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இடத்திலே நாம் கொண்டு போய்ச் சேர்ந்தோமேயானால் அதனை ஏற்றுக் கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் பல சகோதர சமய உள்ளங்கள் காத்திருக்கின்றன. ஆனால், அந்தக் காரியத்தை நாம் செய்யவில்லை. நமக்கு நாமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களிடத்திலே இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் சொல்வதில்லை.

மீலாது விழாவின் அடிப்படை நோக்கம்

மீலாது விழாக்களின் அடிப்படை நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? பெருமானாரின் பெருவாழ்வு ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நாயகத் திருமேனி (சல்) அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமே இஸ்லாத்தைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களை நாடிச் சென்றார்கள். அங்கே அவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். ஆனாலும், இறைநெறியாகிய இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டிய முறையிலே எடுத்துரைத்து, அவர்களையெல்லாம் மனந்திருந்தியவர்களாக இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தார்கள். அதன் விளைவாகத்தான் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தார்கள். அண்ணலார் வழிவந்த, அவருடைய உம்மத்துக்களாகிய நாம் அந்தக் காரியத்தை முனைப்போடு இப்போது செய்வதில்லை. முஸ்லிம்கள் மத்தியிலே மட்டும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டுள்ளோம். சொல்ல வேண்டியதுதான். அவர்களுடைய உணர்வைப் புதுப்பிப்பதற்கும் புதுக் கருத்துகளை, தகவல்களை அவர்களுடைய நெஞ்சத்திலே ஏற்றி வைப்பதற்கும் இப்படிப்பட்ட சொற்பொழிவுகள் தேவைதான். ஆனால், நம்முடை நோக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த இறைச்செய்தியை - இஸ்லாமிய நெறியை - நபிகள் நாயகம் (சல்) அவர்களுடைய வாழ்வையும் வாக்கையும் உரிய முறையில் மற்றவர்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.