பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213



அதிகம் நினைப்பதுமில்லை. அவற்றைப் பற்றி அதிகம் சிந்திப்பதும் இல்லை. கல்வி என்பது அதிலும் வாழ்வியல் படிப்பு என்பது ஆண் மகனுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம். நம் எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது. பெண் மக்கள் மார்க்கக் கல்வி பெற்றாலே அதிகம் என்ற நினைவுதான் நம்மிடையே இன்றுவரை கோலோச்சிக் கொண்டுள்ளது. இஃது எவ்வளவு தவறான, இஸ்லாத்துக்குப் புறம்பான செயல் என்பதை யாரும் அதிகம் உணர்வதாகத் தெரியவில்லை. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மகன் உயர்வு, மகள் தாழ்வு என்ற நிலை அறவே இல்லை. அப்படி எண்ணுவதே பெரும் தவறு. கையிலிருக்கும் ஐந்து விரல்களிலே கட்டை விரல் சற்று பருமனாக இருப்பதைப் போல், குடும்பத்தைக் காப்பவன் என்ற முறையில் கணவனுக்கு ஒருபடி மேலான நிலை உள்ளதே தவிர, மற்றபடி கையிலுள்ள விரல்கள் அனைத்தும் ஒரே நிலையுடையவைகளேயாகும்.

சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய நிலை என்பதை அண்ணலார் அளவுக்குத் தெளிவுபடக் கூறியவர் வேறு எவரும் இலர். நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள் ஆணும் பெண்ணும் என்பது பெருமானாரின் பொருள் மொழியாகும். உலகத்தில் எந்தச் சமயமும், எந்த மத ஆச்சாரியர்களும் இந்த அளவுக்கு ஆணையும் பெண்ணையும் சமநிலைப்படுத்திப் பேசியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

அன்றே பெண்ணுரிமை

இன்றைக்குப் பெண்ணுரிமை பற்றிப் பேசாதவர்களே இல்லை “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என புரட்சிக் கீதம் எங்கும் இசைக்கப்படுகிறது. சரி நிகர் சமானமாக வாழும் இந்த நாட்டிலே பட்டங்கள் பெறவும் சட்டங்கள் செய்யவும் அவற்றை வலுவாகப் பாரில் செயல்படுத்த பெண்கள் உள்ளோம் எனப்