பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

245


மூன்று முஸ்லிம் சித்தர்கள் கூறிய ஞானக் கருத்துகளை அடியொற்றியே மீதமுள்ள பதினைந்து சித்தர்களும் தம் ஆன்மீகக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். எனவே தான் அவர்களும் இவர்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு பதினெண் சித்தர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒத்த கருத்தினையுடைய, ஒரே கூட்டத்தினராகக் கருதப்பட்டனர். இவர்களில் குணங்குடி மஸ்தானின் சீடர்களில் பெரும்பாலோர் முஸ்லிமல்லாதவர்கள், குறிப்பாக சமூகத்தில் மேற்குடி மக்களாகக் கருதப்பட்ட மேற்சாதியினராவர்.

தமிழ் பெண் சூஃபிகள்

இதில் மற்றொரு சுவையான செய்தியும் உண்டு. சித்தர்களில் பெண் சித்தர்கள் யாரும் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையார்கூட பக்தை என்ற வட்டத்துக்குள் வைத்துப் போற்றப்படுகிறாரே தவிர சித்தர் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் இஸ்லாமியப் பெண் சூஃபிகள் ஐவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் மூவரைப் பற்றிய முழுத் தகவல்கள் கிடைத்துள்ளன. தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப் பிள்ளை அம்மாள், கீழக்கரை செய்யது ஆசியா உம்மா ஆகியோரே அவர்கள். இவர்கள் எழுதிய பலப்பல மெய்ஞ்ஞான சூஃபிப் பாடல்களும் கிடைத்துள்ளன. இவர்களில் தென்காசி ரசூல் பீவி நாற்பது சீடர்களைப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். மற்றவர்களெல்லாம் பிற சமயத்தைச் சார்ந்தவர்கள். அந்த ஒரு முஸ்லிம் சீடரும் அவ்வம்மையாரின் கணவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தொட்டவர்கள் சித்தர்கள் - முடித்தவர்கள் சூஃபிகள்

நான் சுமார் இருபது ஆண்டுகட்கு முன்னர் சூஃபி லிட்டரேசர் இன் தமிழ்’ (Sufi literature in Tamil) என்ற கருத்-