பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

செய்திருக்கிறேன். இந்தியாவிற்கு சிந்து நதிப் பகுதியில் ஏராளமான அரபு நாட்டு வணிகர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அரபு வியாபாரிகளின் வாணிகம் அப்பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் காணப் பொறாத இந்திய வியாபாரிகள் குறிப்பாக இந்து சமயத்தைச் சார்ந்த வணிகர்கள் அடிக்கடி தகராறு செய்யத் தொடங்கினர். சில சமயம் இந்து மன்னர்களின் ஆதரவோடும் இவ்வாறு நடைபெறுவது வழக்கமாயிற்று. இதனால் அரபு வியாபாரிகள் பெரும் நட்டமும் மனவேதனையும் அடையலாயினர். அரசின் ஆதரவோடு வணிகர்களின் தடைகளும் தாக்குதல்களும் அளவுக்கு மீறிச் செல்கையில் அரபக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு சிந்துப் பகுதி அரபி வணிகர்கள் இச்செய்தியைக் கொண்டு சென்றனர். இந்தியாவின் சிந்துப் பகுதியில் தாங்கள் பாதுகாப்பு இல்லா நிலையில் அனுபவித்து வரும் துயரங்களை எடுத்துக் கூறியபோது, அரபக ஆட்சியாளர் முஹம்மது பின் காசிம் என்பவர் தலைமையில் ஒரு படையைச் சிந்து பகுதிக்கு அனுப்பி, எதிரிகளை அடக்கி ஒடுக்கி, அரபு வணிகர்கள் சுமுகமாக வணிகம் செய்வதற்கேற்ற இனிய சூழலை உருவாக்கித் தருமாறு பணிக்க, முஹம்மது பின் காசிமும் ஒரு படையுடன் சிந்துப் பகுதிக்கு வந்து, அரபு வணிகர் கட்கும் பாதகமானவர்களோடு போரிட்டு வென்று, நல்ல சூழலை உருவாக்கி அரபகம் சென்றார் என்பது வரலாறு. பாதகமான சூழலிலிருந்த அரபக வணிகர்கட்குச் சாதகமான வணிகச் சூழலை சிந்துப் பகுதியில் உருவாக்கவே முஹம்மது பின் காசிம் சிந்துப் பகுதி மீது படையெடுத்தாரே தவிர, நாட்டைப் பிடிக்கவோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவோ இல்லை.

மக்காப் படையெடுப்பும் ஜிஹாதே

அவ்வளவு ஏன்? பெருமானார் (சல்) அவர்கள் மக்கா மீது படையெடுத்தார்கள் என்றுதான் மொட்டையாகப் பல வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுகிறது. ஆனால்,