பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268



மாற்றார் நம்மைப்பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினால் நம் வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களைப் பற்றி ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். மற்றவர்கள் உண்மை தெரியாமல் நம்மைப் பற்றி தவறான கண்ணோட்டம் செலுத்துவதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என சொல்லுவது சரியான போக்கு அன்று. அந்தத் தவறான உணர்வுகளைப் போக்குவதும் உண்மைகளை அறிந்துணரத் தூண்டுவதும் நம் கடமையாகும். ஏனெனில், பிற சமயத்தவர் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நிலை. மாற்றாரின் தவறான கண்ணோட்டங்களை அலட்சியப்படுத்திவிட முடியாது.

ஒருபுறம் அண்ணலார் வாழ்வையும் வாழ்க்கையையும் அதற்கு அடித்தளமான இறுதித் திருமறையையும் அறிவியல் அடிப்படையில் ஆய முனையும் அறிஞருலகம், மற்றொரு புறம் சமய மாச்சரியங்கட்கு ஆட்பட்டு, உண்மையறிய விழையாது இஸ்லாத்தின் மீது மாசு கற்பிக்க முனையும் கூட்டம். இதை நாம் முழுமையாக அலட்சியப்படுத்தாது, அவர்கள் வீசும் தூசிகளை அப்புறப்படுத்த உண்மையை உணர்த்துவது நம் கடமையாகும். 'அல்லாஹ் பார்த்துக் கொள்வான்’ என்று வீணே இருப்பது தவறு. அவன்தான் அத்தகைய தூசிகளைத் துடைப்பதற்கான அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளான் என்பதை மறக்கக் கூடாது. நாம் நடந்து செல்லும் பாதையில் கல்லையும் முள்ளையும் போடுகிறார்கள் என்றால் போட்டுவிட்டுப் போகட்டுமே என்று வெறுமனே இருக்க முடியுமா? அவற்றை அப்புறப்படுத்தத்தானே அறிவும் சிந்தனையும் இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வாதிகளா? பழமை வாதிகளா?

இஸ்லாத்தின் உண்மைத் தன்மைகளை, அடித்தளப் பண்புகளை, உயிரோட்டமான தத்துவ நுட்பக் கருத்துகளை