பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

275



அது மட்டுமல்ல, பிற சமய தீர்க்கதரிசிகளை, நபிமார்களை யாரும் குறைந்து மதிப்பிட்டுப் பேசுவதைப் பெருமானார் அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை. முந்தைய நபிமார்கள் அத்தனை பேர்களையும் முஸ்லிம்கள் மதித்துக் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். இதை விளக்கும் நிகழ்வொன்று அண்ணலார் வாழ்வில் நிகழ்வுற்றது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணலாரின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். ஒரு சமயம் கடை வீதிக்குச் சென்று யூதர் கடை ஒன்றில் பொருளின் விலையைக் கேட்டார். பேரம் பேசிய போது ஒரு குறிப்பிட்ட தொகையை விலையாகக் கூறியதுடன் இதற்குமேல் குறைக்க முடியாது எனக் கூறினார். அதோடு நிற்காமல் அவ்விலையை அதற்கு மேல் குறைக்கவியலாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், 'மனிதர்களிலேயே மகோன்னதனமான மனிதராகிய, இறைவனால் பெருமளவு மதிக்கப்பட்ட, உயர்த்திச் சிறப்பிக்கப்பட்ட அந்த மூஸா அவர்களின் மீது ஆணையாகச் சொல்கிறேன், இதற்கு மேல் குறைத்துக் கொடுக்க இயலாது' எனக் கூறினார்.

மூஸாவை வானளாவ புகழ்வதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கட்கு கோபம் வந்துவிட்டது. நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறுதிப் பெரு நபியாக, நபிகளுக்கெல்லாம் நாயகமாக இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இறுதி வேதமான திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூஸா அவர்களை உலகத்திலிருக்கும் மனிதர்களிலேயே உயர்ந்தவராக எப்படிக் கூறலாம். இதன் மூலம் பெருமானாரை தாழ்த்தி மூஸாவை உயர்த்திக் கூறுவதா எனக் கருதி யூதரை ஓங்கி அறைந்து விட்டார். அந்த யூதர் நேரடியாகப் பெருமானாரிடம் சென்று நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டு மனம் வருந்திய பெருமானார் உடனே அபூபக்ரை அழைத்து, என்னைத் தாழ்த்தி மூஸா (அலை)