பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

யான முறையில் வசூலிக்கப்பட்டது ' என நீண்ட காலமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியாகும்.

ஜிஸ்யா வரி எதற்காக வசூலிக்கப்பட்டது?

ஏழையின் பங்கு எனக் கூறப்படும் ஜகாத் தொகை, முஸ்லிம்களிடமிருந்து வசூலித்து,அரசே அத்தொகையை ஏழை எளியவர்களிடம் முறையாகச் சேர்த்து விடுகிறது. ஆனால்,முஸ்லிமல்லாத பிற சமய மக்கள் இதுபோன்ற சமுதாய நன்மைகளைப் பெறமுடியாமல் போகிறது. எனவே அந்தக் குறையைப் போக்க உருவாக்கப்பட்டது தான் முஸ்லிமல்லாதார் வழங்கும் ஜிஸ்யா வரி. முஸ்லிம்கள் வழங்கும் ஜகாத் வரி நிகர வருமானத்தில் இரண்டரை சதவீதம். ஆனால், முஸ்லிமல்லாதவர்கள் வழங்கும் ஜிஸ்யா வரி அதைவிடவும் மிகக் குறைவானதாகும்.

ஜிஸ்யா வரி முஸ்லிமல்லாதவர் என்பதற்காகப் போடப்பட்ட வரி அல்ல.

அரசாங்கம் ஒரு முறையை வைத்திருந்தது. ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, எல்லோரும் போர்ப் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அது. இது எல்லா அரசாங்கமும் கடைப்பிடிக்கும் சாதாரண நடைமுறையும் கூட.

எனினும் முஸ்லிம் அரசாங்கப் படையில் சேர்ந்து பணியாற்ற விருப்பமில்லையென்றால் அவர் சிறு தொகையை அரசுக்குச் செலுத்தி விதி விலக்குப் பெற முடியும். இவ்விதி விலக்கு வரியே 'ஜிஸ்யா' என்று அழைக்கப்பட்டது. அதிலும் கூட, பாதிரியார்களுக்கு, பார்ப்பன அர்ச்சகர்களுக்கு, வயோதிகர்களுக்கு, பெண்களுக்கு விதி விலக்கு உண்டு. சிறுவர்கட்கும் நோயாளிகட்கும் விதி விலக்கு உண்டு. மீதமிருப்பவர்களுக்கு மட்டுமே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.