பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

293

விரித்துரைக்கும் வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம் நூல் பற்றி 27 தொடர்ச் சொற்பொழிவுகளும், தமிழில் மெய்ஞ்ஞான இலக்கியங்கள்போன்ற தலைப்புகளில் எட்டு கருத்தரங்குகளையும் நடத்திய பட்டறிவு எனக்குண்டு.

இம்முயற்சிகள் இஸ்லாமியப் பிரச்சாரம் எனும் பெயர் பெறாமலே இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளை பிற சமய மக்களிடம் இலக்கியம் வழியாக எளிதாகக் கொண்டு போக இயன்றது. நம்மவர்களும் தங்கள் இஸ்லாமிய அறிவை, உணர்வை புதுப்பித்துக் கொள்ளவும், மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் இம் முயற்சி வாய்ப்பேற்படுத்துகிறது.

எதிர் விளைவு

இதனை நாம் நீண்ட காலமாகச் செய்யாததால், செய்யத் தவறியதால் எதிர் விளைவுகள் பல விளைந்துள்ளன என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நம்மைப் பற்றி மாற்றார் தவறான பிரச்சாரத்தை வலுவாகச்செய்ய இச்சூன்ய சூழ்நிலை வாய்ப்பேற்படுத்தி தந்து விடுகிறது. இதைத் தெளிவாக அறிந்துணர ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களைக் கொண்டு சீறப்புராணத் தொடர்ச் சொற்பொழிவு ஒன்றுக்கு மீரா ஃபெளண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்திருந்தேன் என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா, அதன் தொடக்க விழா லிங்கிச் செட்டித் தெருவிலுள்ள கிருஷ்ணன் கோயில் அருகில் அமைந்திருந்த திருவருள் மண்டபத்தில் நடந்தேறியது. தொடர்ந்து மாதத்தின் முதல் ஞாயிறும் மூன்றாவது ஞாயிறும் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

முதல் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டத்திற்குச் சென்ற போது, அக்கட்டிட உரிமையாளர் திரு இரா. முத்துக்