பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

301

கையாண்டார்கள். அதன் விளைவாகத்தான் குணங்குடி மஸ்தான் போன்ற தமிழ்ச் சூஃபிக் கவிஞர்களின் சீடர்களாக முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களே அதிகமாக இருந்தனர் என்பது வரலாறு தரும் உண்மை.

முன் மாதிரி வாழ்க்கை

அது மட்டுமல்ல, முஸ்லிம்களின் சொல்லும் செயலும் மற்றவர்களை ஈர்ப்பது இயல்பு. இன்றைக்கும் இஸ்லாத்தை உணர்ந்து பின்பற்றும் பல முஸ்லிம்கள் மற்ற சமயத்தவர் பார்த்து வியக்குமளவுக்கு முன்மாதிரி முஸ்லிம்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்தால் பெயருக்கு முஸ்லிமாக வாழ முனையும் பெயர் தாங்கி முஸ்லிம்களால் அவ்வாறு வாழ இயலாமல் இருக்கலாம். அகத்திலும் புறத்திலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை உய்த்துணர வேண்டும்.

அக - புற வாழ்வு

நம் மனித வாழ்க்கை அகம், புறம் என இரு பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். இரு பிரிவு வாழ்க்கை முறைக்கும் அவற்றின் வெற்றிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். ஆன்மீக அடிப்படையிலான அக வாழ்வும் அறிவியல் போக்கிலான புற வாழ்வும் ஒன்றிணந்ததே இஸ்லாமிய வாழ்க்கை முறை. இதிலே அக வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் தந்து வாழ முனைந்தவர்கள் மெய்ஞ்ஞானச் செல்வர்களான சூஃபியாக்கள். அவர்களது ஞான வாழ்வின் மையப் புள்ளி உருவிலா ஓர் இறைவனாவான்.

கரு ஒன்று - உரு வேறு

ஆய்ந்து நோக்கினால் அனைத்துச் சமயங்களின் அடித்தளமும் ஓர் இறைத் தத்துவத்தாலானதாகவே இருப்பதைக் கண்டு இன்புறலாம். வடமொழியிலுள்ள