பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

போக்குத் தமிழுக்குக் காட்டும் மரியாதையாக இருக்கலாம். அது எப்படி தடையாக முடியும் என உங்களில் சிலர் நினைக்கலாம். ஒரு மொழி காலந்தோறும் உருவாகி நிலைபெறும் மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டு அவற்றை ஏற்று வளர வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஒருவிதக் காலக்கட்டாயம் ஆகும். தெய்வத்தை மாற்ற முடியாது; திருத்த முடியாது; வணங்க மட்டுமே முடியும். அந்த நிலை தமிழுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் தமிழை ஒரு மொழியாக மட்டுமே கருதும் மனப்பான்மை வளரவேண்டும். நம்மை விடப் ஃபிரெஞ்சுக்காரர்கள் மொழிப் பற்று மிக்கவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் மொழியைத் தெய்வமாகக் கருதுவதில்லை. திறம்பட்ட மொழி என்ற அளவிலே அதைப் பாராட்டி மகிழ்கிறார்களே தவிர, துதித்துப் பூஜிப்பதில்லை.

இஸ்லாமும் தாய்மொழியும்

இஸ்லாம் என்றும் தாய் மொழிக்கு முதன்மை தரும் மார்க்கமாகவே இருந்து வருகிறது. வல்ல அல்லாஹ் தன் தூதர்களுக்கு - நபிமார்களுக்கு வேதத்தை வழங்கும்போது, நபிமார்களின் தாய் மொழி மூலம் இறைவேதம் கொடுக்கப்பட்டதாகத் திருமறை தெளிவாகக் கூறுகிறது.

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக்கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்”. (14:4)

எனக் கூறுவதிலிருந்து அனைத்து வேதங்களும் அந்தந்த நபிமார்களின் தாய்மொழியிலேயே அனுப்பப்பட்டன என்பது தெளிவாகிறது. மூஸா (அலை)வுக்கு அவரது தாய்மொழியான ஹீப்ருவில் தவ்ராத் வேதமும் ஈஸா (அலை)வுக்கு அவரது தாய்மொழியில் இஞ்சீல் வேதமும் வழங்கப்பட்டது போல் அரபி மொழியைத் தாய்மொழி