பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

323

அரசியல் ஆதாயம்

மேலும் இந்துத்துவாக் கொள்கையை அரசியல் அரவணைப்போடு வற்புறுத்துபவர்கள் இந்துச் சமயத்தைப் புரிந்து கொண்ட சமயவாதிகளோ அல்லது இந்து சமய அறிவோ நிறைந்தவர்கள் அல்லர். சமயச்சாயம் பூசிக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடித் திரிபவர்கள்.

சமயச்சாயம் பூசும் போக்குதான் இன்று இந்தியாவில் நடைமுறையாகி வருகிறது. கரீமும் கந்தசாமியும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், இரண்டு தனிப்பட்ட நபர்கள், அவர்களுடைய சொந்தக் காரணங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதுதானே நியதி. ஆனால், இன்றைய சூழலில் எப்படிக் கருதப்படுகிறார்கள்? கரீம் என்ற முஸ்லிமும் கந்தசாமி என்ற இந்துவும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சமயத்தோடு இணைத்துக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய மார்க்கமும் இந்து சமயமும் சண்டை போட்டுக் கொண்டது போன்ற மனப்பிரமையை உருவாக்குகிறார்கள். இத்தகைய தவறான போக்குகளை மாற்றுவதற்கான விழிப்புணர்வு இப்போது உருவாகி வருவது மனதுக்கு ஆறுதலளிப்பதாக உள்ளது.

சமயம் தனிமனிதச் சார்புடையது

இந்தியாவில் சமயப் பிரச்சினை தலையெடுக்காமல் இருக்க வேண்டுமெனில் அனைத்துச் சமயங்களும் அவரவர் வீட்டிற்குள்ளும் வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர சமுதாய வீதிக்கு வர வேண்டிய அவசியமே இல்லை.

சமயம், தனி மனிதச்சார்புடையதா? சமுதாயச் சார்புடையதா என்றால் தனி மனிதச் சார்புடையது என்றுதான் சொல்வேன். அவரவர் கொள்ளும் இறை நம்பிக்கை, செயல்பாடு, நன்மை தீமை இவைகளுக்கேற்ப இறையருள் பெற முடிகிறதென்றால், அது முழுக்க முழுக்க தனி மனிதச் சார்புடையதாகவே அமைந்ததெனலாம்.