பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

மக்களிடையே மட்டுமல்ல, படித்த மேல்மட்ட மக்களிடையேயும் இதே நிலை நிலவுவதுதான் பரிதாபம். ஷாபானு வழக்கிலே தீர்ப்புச்சொன்ன நீதிபதி, தீர்ப்புச் சொன்ன பின்னால் இஸ்லாத்தைப் பற்றிச் சரிவர தெரிந்து கொள்ளாமல் முல்லாவின் முஹமடன் லாவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புச் சொல்ல முன் வந்தது ஒரு தவறாகக்கூட இருக்கலாமோ என்ற ஒரு எண்ணம் என்னை உறுத்திக் கொண்டுள்ளது என்று கூறி வருந்தியதாகக் கூறுவார்கள். இந்த அளவுக்கு மேல் மட்டத்தில் இருப்பவர்களும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் சரியாக இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாத நிலையே இன்றும் நீடித்துக் கொண்டுள்ளது. இந்நிலைமையைப் போக்க வேண்டிய இன்றியமையாக் கடப்பாடு இன்றைய முஸ்லிம் களுக்கு உண்டு. இக்கொள்கையைப் பொருத்தவரை இளமை முதலே நான் உறுதியோடிருக்கிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அக்கோணத்தை நோக்கி என் செயல்பாடுகள் அமையாமல் இருப்பதில்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
அண்ணலார் விழா

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது பல்கலைக் கழக மாணவர் பேரவையின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த ஆண்டில் மாணவர் பேரவையின் சார்பில் 'மீலாது விழா' கொண்டாட முடிவு செய்தேன். இதனை பேரவையுள் அடங்கியிருந்த 36 மாணவர் அமைப்புகளின் செயலாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்காக கோகலே ஹாலில் நடத்திக் கொள்வதற்கான அனுமதி பெற விரும்பி பதிவாளரைத் தொடர்பு கொண்டேன். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவரான அவர், பல்கலைக் கழகச் சார்பில் 'மீலாது விழா' என்ற பெயரில் இஸ்லாமிய விழா நடைபெறுவதை விரும்பாத அவர் அனுமதி தரத் தயங்கினார். துணை வேந்தரிடம் அனுமதி பெறுமாறு கூறிவிட்டார்.