பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89



முஸ்லிமல்லாதாருக்குக் கதவு திறந்த
இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள்

இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ் முஸ்லிம்களுக்குப் பயன்பட்டதைவிட தமிழறிவுமிக்க தமிழ்ச் சகோதர, சமயத்தவர்கள் இஸ்லாத்தை உரிய முறையில் அறிந்து தெளியவும் இஸ்லாத்தோடு தங்களை இணைத்து இஸ்லாமானவர்களாக ஆகவும் வழியேற்பட்டது என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும். இஸ்லாம் இப்படித்தான் தமிழ் மண்ணில் பரப்பப்பட்டதே தவிர வாள் கொண்டு யாரும் இஸ்லாத்தைப் பரப்பவில்லை என்பது வரலாறு தரும் உண்மையாகும்.

இவ்வாறு தமிழ் பிறந்த தமிழகத்தில் ஆட்சியிலோ ஆலயங்களிலோ, ஆதரிப்பதற்கு ஆட்களே இல்லாத இருளடைந்த ஒரு கால கட்டத்தை இலக்கிய ஒளி மிகுந்த காலமாக மாற்றியமைத்து, வளமான வளர்ச்சிக்கு வழி கண்ட பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கட்கு உண்டு. அதே சூழல் இன்றும் தமிழுக்கு ஏற்பட்டுள்ளது என்பது நினைத்து மகிழ வேண்டிய நிதர்சன உண்மையாகும்.

இருள் படரும் இன்றைய நிலை

தமிழைப் பொருத்தவரை இன்றையத் தமிழகத்தின் நிலை என்ன? எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் கூசுகிறது. தமிழைப் போற்ற, வணங்கக் கற்றுக் கொண்ட தமிழன், அம்மொழியை ஆங்கிலத்தைப் போல், ரஷ்ய மொழியைப் போல், சீன, ஜப்பானிய மொழிகளைப் போல் காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப, ஆற்றலுள்ள அறிவியல் மொழியாக அரசு, சமுதாய அமைப்புகளின் மொழியாக ஆக்க, ஆக்கப்பூர்வமாக வளர்க்கத் தவறி விட்டான். தமிழ் நாட்டைப் பொருத்தவரை தமிழ் ஆட்சி மொழியாக 1956முதல் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சி மொழியாக அனைத்து மட்டங்களிலும் தமிழ் ஆட்சி செலுத்தவில்லை. மழலையர் பள்ளி முதல்