கதை சொன்னவர் கதை
அந்தக் காலத்தில் சந்தையில் ஆடு மாடுகளை விற்பதைப் போல், மனிதர்களையும் விற்று வந்தனர். அப்படி விற்கப்பட்ட ஒரு மனிதர்தாம் ஈசாப். அவரை சாந்தஸ் என்பவர் விலைக்கு வாங்கித் தம்மிடம் அடிமையாக வைத்திருந்தார்.
ஒரு நாள், சாந்தஸ் குடி வெறியில் தமது நண்பர்களிடம் ஒரு பந்தயம் கட்டி விட்டார். அதாவது, சமுத்திரத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் அவர் குடித்துப் பொட்டலாக்கி விடுவதாகவும், அப்படிச் செய்யாவிடில், தம் சொத்து முழுவதையும் கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
ஆனால், மயக்கம் தெளிந்ததும், தாம் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்தார். ‘இதற்கு என்ன வழி?’ என்று தம்மிடம் அடிமையாக இருந்த ஈசாப்பைக் கேட்டார்.
ஈசாப் ஒரு நல்ல யோசனை கூறினார்; அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடிக்க சாந்தஸ், ஈசாப்புடன் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.
சமுத்திரத்தை அடைந்ததும், ஈசாப் அங்கு நின்றவர்களைப் பார்த்து, “நண்பர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரை மட்டுமே குடிப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றதே! குடிக்கக் குடிக்கத் தண்ணீர் வந்து கொண்டேயிருந்தால், எப்படிக் குடித்துப் பொட்டலாக்குவது? ஆகையால், முதலில் ஆற்று நீர் சமுத்திரத்தில் விழாதபடி முகத்துவாரத்திலேயே அடைத்து விட வேண்டும். அப்போதுதான் என் எஜமானர் சொன்னபடி செய்வார்” என்றார்.
117
2994-8