இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்றே அவரும் கூறுகையில்
ஏங்கித் தவித்த அப்பையன்,
“ஐயா, உயிரோ போகிறதே!
அடியேன் பிழைத்திட இப்பொழுதே
உதவி செய்தால் பலனுண்டு.
யோசனை அப்புறம் கூறிடலாம்.
ஐயோ! உதவி உதவி!” என
அலறினன். உடனே அம்மனிதர்
உணர்ந்தனர் பையன் நிலைமைதனை;
உடனே ஆற்றில் பாய்ந்தனரே !
பாய்ந்தே அவனைக் கரைதனிலே
பத்திர மாகச் சேர்த்தனரே !
சிறுவன் பிழைத்தான், அவருடைய
சிறந்த உதவி பெற்றதனால்.
உதவி எதுவும் செய்யாமல்
யோசனை சொல்வதில் பலனுண்டோ ?
‘இல்லை, இல்லை’ என்றேதான்
இக்கதை மூலம் உணர்கின்றோம்.