இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மனிதர் இருவர் தலைகளும்
மறைந்த வுடனே, வேகமாய்க்
குனிந்த முதுகுக் குரங்குமே
குதித்தே ஓடி வந்தது;
கரையில் கிடந்த வலைதனைக்
கையில் எடுத்துக் கொண்டது;
விரைவில் குளத்தில் குதித்தது;
வீசி வலையை விரித்தது.
வலையில் மீன்கள் எதுவுமே
வந்து சிக்கு முன்னரே,
தலையும் காலும் சிக்கியே
தவித்த தந்தக் குரங்குமே!
தகுந்த உதவி இல்லையே!
தப்ப வழியும் இல்லையே!
மிகுந்த முயற்சி செய்தது;
வீண்தான் என்றே அறிந்தது!
“குளத்தில் வலையை விரிக்கவும்.
குதிக்கும் மீனைப் பிடிக்கவும்
பழக்க மில்லா என்னையே
பாழும் ஆசை கெடுத்ததே!
மந்தி யாகப் பிறந்தநான்
மனித னாக நடித்ததால்,
இந்தக் குளத்தில் சாகிறேன்.
இதுஎன் மடமை” என்றது.
47