பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரும்பத் திரும்பக் கறுப்பனும்
திருடித் திருடி மெத்தவும்
பெரிய திருடன் ஆயினன்.
பெயரைக் கேட்டே நடுங்கினர்!

கொள்ளைக் காரக் கறுப்பனால்
கொடுமை பெருக லானது.
கள்ளன் அவனைத் தேடியே
காவ லர்கள் பிடித்தனர்.

பிடித்து அவனைத் தூக்கிலே
போட முடிவு செய்தனர்.
துடித்து அன்னை அலறினள்,
துக்கச் செய்தி கேட்டதும்.

தூக்குப் போடும் தினத்திலே
சூழ்ந்து மக்கள் கூடினர்.
ஏக்கம் கொண்ட தாயுமே
இதயம் துடிக்க வந்தனள்.

“அன்னை யோடு பேசவே
ஐந்து நிமிஷம் வேண்டுமே”
என்று கறுப்பன் கெஞ்சவே
இசைந்தார், அங்கே உள்ளவர்.


49