பக்கம்:ஈச்சம்பாய்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

ஈச்சம்பாய்



எங்கேயோ பார்க்கும் பராக்குப் பார்வைகள். கடுவாய்ப் பற்களைக் கடித்தபடியே எவரையோ எதையோ விழுங்கப் போவது போன்ற திறந்தவெளி வாய்கள்... உப்பிப் போன கழுத்துக்கள்..... குளிர்சாதன வசதிகளால் வெளுத்துப்போன கருப்புகள். இந்த இரண்டு அமைச்சர்களும், 'இனக்கலவரம்' என்று ஒரேகுரலில் போட்டியிட்டு பேசுகிறார்கள். பழனிச்சாமிக்குக் கோபம் வந்தது, வாய்விட்டே பேசினார். 'தென்மாவட்டங்களில் நடந்ததும், நடப்பதும் இனக்கலவரம் இல்லடா... இல்லடி... சாதிக்கலவரம்... ஒரு இனத்தோட உட்சாதிகள் நடத்தும் கலவரம்'.

பழனிச்சாமி, அந்த அமைச்சர்கள் பேசுவதை முன்பெல்லாம் தட்டிவிடுவார். இப்போது நேரப் போக்காக உற்றுக் கேட்டார். அவர்கள் இனக் கலவரம், இனக் கலவரம் என்று வார்த்தைக்கு வார்த்தை வாயாடுகிறார்கள், இடையிடையே மறக்காமல், தத்தம் தலைவர்களின் பாதங்களை நாக்குகளால் மானசீகமாய் நக்குகிறார்கள். எதிரெதிராய் வாதாடுகிற இவர்களில் ஒருவர், கண்களைத் துடைக்கிறார். உடனே அதற்குப் பதிலடியாய் இன்னொருத்தர் தேம்பித் தேம்பி அழுகிறார். நடுவரான வீரபாண்டியன், சிரிப்புத் தாங்கமுடியாமல் முகத்தை மறைத்துக் கொள்கிறார்.

பழனிச்சாமி, இப்போது அந்த அமைச்சர்களை கோபம் கோபமாய்ப் பார்த்தார். அமைச்சர் பதவிக்கு, அவர்கள் புதுமுகங்கள், ஆனால் அவருக்கோ பழைய முகங்கள். கல்லூரி முகங்கள். இவர்களில் மத்திய அமைச்சர், அப்போதே நல்ல கவிஞர். மாநில அமைச்சர், சிறந்த பேச்சாளர். ஆனால் இந்தப் பழனிச்சாமிக்கு முன்னால், அவர்களின் பேச்சோ, கவிதையோ எடுபட்டதில்லை. கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/156&oldid=1371758" இலிருந்து மீள்விக்கப்பட்டது