பக்கம்:ஈச்சம்பாய்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஈச்சம்பாய்



நோக்கி குறிபார்த்து நடந்தான். முத்துக்கனி மன்றாடினாள்... எண்ணாச்சி... எண்ணாச்சி. இது ஒன் தம்பி. வளத்த கடா மாதிரி வெட்டிடாத.. அப்புறம் நீதான் வருத்தப்படுவே....

மாரிமுத்துக்கு, எதிரே நிற்பவன், எதிரி அல்ல என்பதும் அவன் தன் கூடப்பிறந்த தம்பி என்பதும் மெல்லப் புரிந்தது... ஆனாலும் குருவி பறந்த கிளை ஆடுவதுபோல் ஆவேசம் முற்றும் கலையாமல் தம்பியின் தலை முடியை செங்குத்தாய் பிடித்துக் கொண்டு அவனை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டே, அரிவாள் வீச்சாய் பேசினான்.

'நாம வாழ்ந்து கெட்ட குடும்பம் என்கிறத மறந்திட்டியடா... அப்பா,குடி- கூத்துன்னு இருந்த சொத்த அழிச்சுட்டு குடியிலே செத்ததால நம்ம குடி இப்படி ஆய்ச்சுதுன்னு ஒனக்கு எத்தனை தடவ சொல்லியிருப்பேன். இதே அரண்மனை வீட்டுல பிறந்த நம்ம அம்மா, நொடிச்சு போயிட்டாள்னு, தான் சாப்பிட்ட எச்சில் சாப்பாட்ட, அம்மாகிட்ட நீட்டினவள் அந்த நீலி... நானும் பக்கத்துலதான் நின்னேன்... அன்னைக்கு போட்டோம் சபதம்.... செத்தாலும் சாவோமே தவிர, இந்த வீட்டுப் படிக்கட்ட மிதிக்க மாட்டோமுன்னு அம்மாவும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் சத்தியம் செய்தோம்.. அந்தச் சத்தியத்தை பொய்யா ஆக்கிட்டியேடா பாவி...

அண்ண னின் முடிப்பிடியில் தம்பியின் கண்கள், துருத்தின. மாரிமுத்துவின் அரிவாள் திடப்பட்டு நின்றது.... முத்துக்கனி இப்போது எய்யோ... எம்மோ என்று அவர்கள் இருவரையும் சுற்றிச் சுற்றி வந்தாள்...

'எண்ணாச்சி... எண்ணாச்சி... இது நீ வளத்த பின்ள... மறந்துடாத... என்று அவனுக்கு நினைவு படுத்தினாள். அவன் மோவாயைப் பிடித்து தாங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/54&oldid=1371990" இலிருந்து மீள்விக்கப்பட்டது