பக்கம்:ஈச்சம்பாய்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஈச்சம்பாய்



"லட்கமி! லட்கமி! என்னைத் திட்டேன். திட்டேன், அப்போத்தான் நேக்கு திருப்தி. ரொம்பத்தான் துஷ்டனா நடந்துக்கறேன்? டீ... திட்டேன், திட்டேன்",

மாமி 'திட்டினாள்.

"ஏன் குழந்தை மாதிரி என்னை இம்சிக்கிறேள்? ஒருத்தி காத்துண்டிருந்தானு இந்தக் கூத்தடிச்சேளே, ஆபீஸ்லே நமக்காக எத்தன பேர் காத்துண்டிருப்பா? சட்டையைப் போடுங்கோ. நான் பத்து நிமிஷத்துலே ரெடியாயிடறேன்."

பஞ்சாபகேசன், அசல் குழந்தை மாதிரி தலையாட்டியபோது, மாமி அவசர அவசரமாக குளியலறைக்குள் போனாள். பத்து நிமிடத்தில் வெளியே வந்து, தன்னுடைய பட்டுப் புடைவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். சில நகைகளை எடுத்துப் போட்டுக் கொண்டாள். கணவன் முகத்தில் கண்ணாம்புபோல் தெரிந்த பவுடர் தூள்களை முந்தானையால் துடைத்து விட்டாள்.

"அய்யய்யோ... ஏன்னா, ஷர்ட்லே இங்க் போட்டுட்டேனே" என்று சொல்லியபடியே அவரது சட்டைப்பித்தான்களைப் பிரித்து அவரிடமிருந்து அதை அப்புறப் படுத்திவிட்டு, வேறொரு சட்டையை மாட்டிவிட்டாள். பிறகு, "உம் புறப்படுங்கோ ..." என்றாள்.

லட்கமியின் தோளில் ஒரு கையைப் போட்டபடி, பஞ்சாபகேசன் நடந்தார். மாமி, தன் வலக்கையை, அவருடைய இடுப்போடு சேர்த்துக் கோர்த்துக் கொண்டாள். அவர் நடக்கிறார் என்றுதான் பேரு, மாமி கிட்டத்தட்ட அவரைத் தூக்கிக் கொண்டே போனாள். பஸ் நிலையத்துக்குப் போகும் வழியில் பார்த்தவர்களை எல்லாம் பார்த்து, "எங்காத்துல இன்னிக்கு ரிட்டயர் ஆகறார், தெரியுமோ. சென்ட் ஆஃப் பார்ட்டிக்காகப் போறோம்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/78&oldid=1371998" இலிருந்து மீள்விக்கப்பட்டது