பக்கம்:ஈச்சம்பாய்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கடன் பிடிப்பும், பணியாளர்களின் உரையாடலும் அலுவலகச் சூழலைக் கண் முன்னே கொண்டுவந்து விடுகின்றன. (ஈரத்துணி).

'சங்கக்'காலம்

சாதி உணர்வு, மோதல்களாக வெடிக்கும் 'சங்கக்'காலம் இது அண்ணன் தம்பியராய், அக்காள் தங்கையராய்ப் பல சாதி மக்களும் ஒட்டுறவாய் வாழும் ஊர்ப்புறங்களில் அடிக்கடி மோதலும் சாதலும்! வசதி படைத்த சிலர் தலைவர்களாய், அதிகாரிகளாய்ப், பின்னிருந்து, அப்பாவி மக்களை உசுப்பிவிடும் கொடுமை பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோரிடையே நடந்துவரும் இந்தச் சாதி மோதலைக் கதைகளாக்கித் தனது சமூகப் பொறுப்புணர்ச்சியைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருவதில் சமுத்திரத்திற்குத் தலையாய தனி இடமுண்டு. 'ஒரு சத்தியத்தின் அழுகை'யில் இருந்து இதை உணர்ந்து வருகிறேன். இத் தொகுப்பிலும் 'பிணமாலை' 'உயிர் ஊஞ்சல்' கதைகள் சாதிச் சிக்கலைக் கருவாகக் கொண்டவை. மோதிக் கொள்பவர்கள் எந்தச் சாதியினர் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் நம் உய்த்துணர்வுக்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். அதுவும் ஒரு கதையில் தாக்க வருபவர்கள், வெளியூர் எதிராளிகளின் சாதியைத் தெரிந்துகொள்ளப் பலமுறை முயன்றும் முடியாமற் போவதாகவும் இறுதியில் ஒரு நெருக்கடியால் இரு தரப்பினரும் ஒரே வண்டியில் இணைந்து செல்வதாகவும் இயல்பாகக் காட்டிச் செல்கிறார். மோதும் களத்தில் மனித மனத்தின் மேன்மையான பகுதியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு குழந்தையின் செயல்கள் சிறக்கின்றன. கத்தி கம்புகளோடு நிற்கும் எதிரிகள்! எதிரிகள் என்று அறியாத இரண்டு வயதுக் குழந்தை அவர்களைப் பார்த்துச் சிரிப்பதும், ஒருவரைத் 'தாத்தா' என்று அழைப்பதும், துண்டைப் பிடித்து இழுப்பதும் மங்கியிருக்கும் மனிதப் பண்பைத் தூண்டிவிடும் நிகழ்ச்சிகளாக அமைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/8&oldid=1495090" இலிருந்து மீள்விக்கப்பட்டது