பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

101



விடுதலை வேர்கள்

12.4.1854இல் ஈரோட்டில் பிறந்த பகடால நரசிம்மலு நாயுடு 1885இல் முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அதே கொள்கையோடு அதற்கு முன்பு சென்னையில் தொடங்கிய சென்னை மகாஜன சபையிலும் உறுப்பினராக இருந்தார். 1885, 1886 இரு காங்கிரஸ் மாநாடுகள் பற்றி நூல் வெளியிட்டார். மூன்றாவது சென்னை மாநாட்டில் 1887இல் 'காங்கிரஸ் கீதம்' என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார்.

தந்தை பெரியார் (1879-1973) 1919இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தார். இவர் தமிழகக் காங்கிரஸ் தலைவராகவும், செயலாளராகவும் இருந்த காலத்தில் ஈரோடே மாநிலத் தலைமையமாக விளங்கியது.

எம்.ஏ. ஈஸ்வரன் (1890-1978) பி.ஏ. பட்டத்தைத் துறந்து ஊர் ஊராகக் கதரைச் சுமந்து விற்றார். எல்லாப் பேராட்டங்களிலும் தலைமை தாங்கி முன்னின்ற இவர் "சுதந்திரம் பெறும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். காலுக்குச் செருப்பணிய மாட்டேன்" என்று கூறி அவ்வாறே கடைசிவரை இருந்தார். 1946இல் போட்டியின்றி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரோடு ஆர்.சி. கிருஷ்ணன் 1930 முதல் நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். வார்தா சபர்மதி ஆசிரமம் சென்று காந்தியடிகளுடன் தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டவர். தன் சொத்து முழுவதையும் விடுதலைப் போருக்காக இழந்தவர். தாழ்த்தப்பட்ட சிறுவனை வீட்டில் வளர்த்தார். இவர் தோற்றம் நேதாஜி போல் இருக்கும்.

கேசவலால் காளிதாஸ் சேட் விடுதலை இயக்க மாநாடுகளை நடத்தியவர். நகராட்சிக் கட்டிடங்களில் காங்கிரஸ் கொடி பறக்கக் காரணமாக இருந்தவர். தான் எடுத்த மேனகா திரைப்படத்தில் 'பாரதியார்" பாடலை முதலில் பாடவைத்தார். இவர் வீட்டில் 1934ல் காந்தியடிகள் தங்கினார்.