பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

22. சமயங்கள்


அ) சைவம்

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலோர் பின்பற்றும் சமயம் சைவ சமயமேயாகும். கொங்கு நாட்டை ஆட்சிபுரிந்த இரட்ட அரசர்களில் ஏழாவது கடைசி அரசனான திருவிக்கிரமதேவன் சங்கரதேவர் ஆணைப்படி சிவஞானம் அடைந்து வாழ்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.

சோழர் வருகைக்குப்பின் சைவமும் சிவவழிபாடும் பெருகின. முதல் பராந்தகனின் திருவிடைமருதூர்க் கல்வெட்டில் "கொங்கு ஸ்ரீ கார்யம் ஆராய்கின்ற காரிநக்கன்" என்ற கோயில் அலுவலன் குறிக்கப்படுகின்றான். ஈரோடு மாவட்டத்தில் பல கோயில்களைச் சோழர் புதியதாகக் கட்டினர். அவை

விக்கிரம சோழீசுவரம் (கண்ணபுரம்)
குலோத்துங்க சோழீசுவரம் (முத்தூர்)
செயங்கொண்ட சோழீசுவரம் (நத்தக்காரையூர்)
பராக்கிரம சோழீசுவரம் (வெள்ளகோயில்)
அபிமான சோழீசுவரம் (கண்ணபுரம்)

எனப் பெயர் பெற்றன.

சோழநாட்டிலிருந்து கோயில் பூசைக்கு சிவப்பிராமணர்கள் அழைத்து வரப்பட்டனர். "சோழர்கள் கொங்கிடை மெய்த்தல பூசை நன்குறத் தன் நாட்டுளாரில் சமர்த்தர்கண்டு" அழைத்துக் கொண்டு வந்து நிலையான காணியும் மேன்மையுந் தந்ததாகத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை கூறுகிறது. சோழர்கள் தமது மண்டலத்துச் சைவ மறையோரைப் பூசனைக்கு அழைத்து வந்ததாகக் கொங்கு மண்டல சதகமும் கூறுகிறது.

காணியுடைய சிவபிராமணர்கள்
திருமழபாடிப்பட்டன், தில்லையுடையான்
திருவேகம்பமுடையான், சிகாழிநாதன்

என்ற சோழமண்டல ஊர்ப் பெயர்களுடன் குறிக்கப்படுகின்றனர்.