பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

125


"ஆசிரியர் ஐக்கிய சங்கம்" தொடங்கினார். "நவீனக்கல்வி" என்ற முத்திங்கள் இதழ் நடத்தினார். பவானி புலவர் அ.மு. குழந்தை இவரைப்பற்றி பாப்புலி வெண்பா என்ற நூலை இயற்றியுள்ளார். எச்.ஏ.பாப்லி 1932இல் திருக்குறள் அறத்துப்பாலுக்கு ஆங்கில உரை எழுதி வெளியிட்டார்.

கல்விப்பணி, மருத்துவப்பணி, இல்லங்கள், தொழிற்கல்வி, ஊனமுற்றோர் மனநலம் குன்றியோர் காப்பகங்கள்,இலவச உணவு-உறைவிட வசதிகள் செய்தல் போன்ற சமயம் சாராத சமூக மேம்பாட்டுப்பணிகள் கத்தோலிக்க, புராட்டஸ்ட்டெண்ட் திருச்சபை மூலம் பல நடைபெறுகின்றன.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை ஆலயங்கள்

இவை பெரும்பாலும் கோபுரங்களுடன் காணப்படும். உருவ வழிபாடு உண்டு. இந்துக்கள் கோயில் போல சில இடங்களில் தேர்த் திருவிழாக்களும் உண்டு.

தூய அலோசியஸ் கிறித்துவ தேவாவயம், தாராபுரம்

இயேசு சங்கத்தைச் சேர்ந்த இராயந்து என்பவரால் 1608ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1750இல் கட்டப்பட்ட பெரிய தேவாலயம் திப்பு - கம்பெனிப் போரில் அழிந்தது. இப்போதுள்ள ஆலயம் பெர்சிவல் என்ற குருவால் 1857இல் கட்டப்பட்டது.

தூய இக்னேஷியஸ் ஆலயம், அக்கரைக் கொடிவேரி

பழயூர் என்ற இடத்தில் இருந்த ஆலயம் வெள்ளத்தால் அழிந்ததால் அம்புரோஸ் என்ற குருவால் 1947இல் கட்டப்பட்டது. கொடிவேரியில் மருத்துவமனையும் கட்டியுள்ளனர்.

தூய மேரியின் ஆலயம், ஈரோடு

1887இல் கட்டப்பட்ட இவ்வாலயம் விபான்செக் என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது. தந்தை குசை என்ற குருவால் 8.9.1968இல் இப்போதைய ஆலயம் கோபுரத்துடன் கட்டப்பட்டது.