பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

135


புலவர் இயற்றிய வேளாளபுராண ஏட்டுச்சுவடியை கொங்காருபாளையம் முத்துசாமிப்புலவர் விலைக்கு வாங்கி ஈரோடு நித்திய கல்யாண சுந்தரம் அச்சுக்கூடத்தில் 1907ல் அச்சிட்டார். உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு போன்றவை சென்ற நூற்றாண்டிலேயே அச்சிட்டனர்.

பிள்ளைத்தமிழ், காதல், குறவஞ்சி, சதகம், தூது போன்ற பல சிற்றிலக்கியங்கள் ஓலையிலிருந்து பெயர்த்தெழுதப்பட்டு அச்சாகியுள்ளன. கொடுமணல், வீரசோழபுரம், புதுப்பை போன்ற பல ஊர்கள் புலவர் பரம்பரையினர் வாழ்ந்த ஊர்கள். அங்கு பல சுவடிகள் கிடைத்தன. ஈரோடு மாவட்டத்தில் சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாத்து, பெயர்த்தெழுதி அச்சிட்டவர்களில் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் முதன்மையானவர். ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடத்தில் பல சுவடிகள் உள்ளன.

பல தனியார்களிடமும் ஓலைச்சுவடிகள் உள்ளன. சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கமலக்கண்ணன் தம் மாணவர்களோடு மாவட்ட ஓலைச்சுவடிகளைப் பட்டியலிடுவது பாராட்டுவதற்குரியது.

இச்சுவடிகளில் பல இன்னும் பதிப்பிக்கப் பெறாதவை. திண்ணைப் பள்ளியில் பாடம் படித்தவர்கள் கல்வி ஒழுக்கம், நீதி ஒழுக்கம் போன்ற நூல்களை ஓலையில் எழுதிப்படித்தனர். ஒவ்வொன்றிலும் பல சுவடிகள் கிடைத்துள்ளன.

"நூற்றாண்டாயினும் நூல் பலகல்" - கல்வி ஒழுக்கம்
“ஏழை என்பவன் எழுத்தறியாதான்" - கல்வி ஒழுக்கம்
"நடக்கும் தடத்தை முடக்காதே" - நீதி ஒழுக்கம்
"அடைத்த குளத்தை முறிக்காதே" - நீதி ஒழுக்கம்

என்பன அவற்றுள் சில அடிகளாகும்.