பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

27. நீர்ப்பாசனத் திட்டங்கள்



காவிரியாறும் 'வானி' ஆகிய பவானியாறும் 'காஞ்சி' ஆகிய நொய்யலாறும் 'ஆன்பொருநை' ஆகிய 'அமராவதியும்' எண்ணற்ற ஓடைகளும் செயற்கையான கிணறுகளும் ஏரிகளும் குளங்களும் ஈரோடு மாவட்ட நீர்ப்பாசன ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

வேளாண்மை என்பது நிலத்தொடு நீரைச் சேர்ப்பதால் வருகிறது. சங்ககாலக் குடபுலவியனார் என்ற புலவர் நிலத்தொடு நீரைச் சேர்ப்பவர் புகழே உண்மையான புகழ் என்று கூறுகிறார். ஈரோடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மிகச் சிறப்பாக உள்ளன. இதில் பொதுப் பணித்துறையினர் பணி பாராட்டுதற்கு உரியது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நீர்ப்பாசனமே இன்றியமையாததாகும்.

பழைய திட்டங்கள்

வெள்ளோடு - கனகபுரத்தில் வாழ்ந்த கொங்கு வேளாளரில் சாந்தந்தை குல நஞ்சையகவுண்டர் மகன் லிங்கையன் தன் வீரத் திறனால் வீரபாண்டியனின் அமைச்சரும் தளபதியும் ஆனார். பூந்துறைநாடு வாழ் பவானியாறு காவிரியோடு கலக்கும் இடத்தின் அருகில் ஒரு அணைகட்டி 56½ மைல் நீளம் கால்வாய் வெட்டி அதை நாட்டுடமையாக்கினார். தன் வழியினர் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆணையிட்டார். 12 ஆண்டுகள் முயன்று கட்டிய அணையும் கால்வாயும் கி.பி. 1282ஆம் ஆண்டு தை 5ஆம் நாள் முடிக்கப்பட்டது. இப்பணியை பல இலக்கியங்களும் தனிப்பாடல்களும் பாராட்டுகின்றன. இதனால், சுமார் 15743 ஏக்கர் நிலப்பரப்பு 'பாசனம்' பெறுகிறது. காலிங்கராயன் டணாயக்கன் கோட்டைப் பகுதியிலும் பவானியாற்றில் ஒரு அணை கட்டினார். அது லிங்கய்யன் அணை எனப்பட்டது. அந்த அணை இப்போது பவானிசாகர் அணையில் மூழ்கி விட்டது.

கோபி வட்டத்தில் உள்ள கொடிவேரியில் பவானியாற்றைத் தடுத்து ஒரு அணையைக்கட்டிய உம்மத்தூர்த் தலைவன் நஞ்சராசன்,