பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஈரோடு மாவட்ட வரலாறு


“கோயிலுக்கு வடக்கில் தாமரைக்குளம், இக்குளத்தின் கீழ்
புன்செய் விளைத்த குடிமக்களே இக்குளத்தால் நீர் பாயும்
இடமெல்லாம் விளைத்து குடிநீங்காத் தேவதானமாக உழுது
விளைந்த நிலத்துக்கு மூன்றத்தொன்று வாரம் களத்திலே
கண்காணித்துக் குடுப்பாராக”

என்று திங்களூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

குடிமக்களே குளம் வெட்டி காடாய்க் கிடந்த நிலத்தை உழுது பயன்படுத்தினால் வாரம் கொடுக்க வேண்டியதில்லை என்றும், சில இடங்களில் சில ஆண்டுகளுக்கு வாரம் கொடுக்க வேண்டாம் என்றும் பின் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்தைப் பல ஆண்டுகள் படிப்படியாக ஏற்றி உரிய வாரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

கொங்கு நாட்டில் மண்டல சதகங்கள் தொகுத்துக் கூறும் பன்னிரு ஆறுகளில் 8 ஆறுகளில் 90 அணைகள் இருந்ததாக இராமபத்திரன் பட்டயமும், தென்கரை நாட்டுப் பட்டயமும் கூறுகின்றன. நொய்யல் (32), அமராவதி (20), மீள்கொல்லியாறு (18), நல்லமங்கையாறு (6), பவானியாறு (4), உப்பாறு (4), நன்காஞ்சி (4), குடவனாறு (2) என்பன அணைகள் உள்ள ஆறுகளாகும். இவற்றில் பாதி அணைகளுக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன.

நிலம் நன்செய், புன்செய், சுருஞ்செய், தோட்டம், தடி, தாறு, செய், காடு, வயக்கல், கவர், செம்மண்குழி, செவ்வரி நிலம் எனப் பலவாறு அழைக்கப்பட்டது. வயக்கல் என்பது பலமுறை உழுது ‘வசக்கி' பண்படுத்தப்பட்ட நிலமாகும். நிலங்களுக்குப் பெயர்களும் வைக்கப்பட்டிருந்தன. "பூலாஞ்செய் என்று பெயர் கூவப்பட்ட நிலம்" என்பது போல் அவை குறிக்கப்படும்.

சூழி, மா, வேலி, காணி என்று பல அளவுகள் நிலங்களுக்குக் கூறப்பட்டன. நிலங்கள் அளக்கப்பட்டன. "24 அடிக்கோலால் 256 குழி கொண்டது ஒரு மாவாக" என்பது ஒரு கல்வெட்டு, அரசனுடைய கால் (பாதம்) அளவே அடி எனப்பட்டது. "தேவர் தம் செருப்புக் காலாலே" "தம் பாட்டனார் பெரிய தேவர் காலாலே" யுள்ள அளவு