பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

169


நாட்டில் பல இடங்களிலும் வட நாட்டிலும் பிற மாநிலங்களிலும் விற்பனை நிலையங்களை அமைத்துள்ளன. பவானி ஜமுக்காளமும், சென்னிமலைப் படுக்கை விரிப்பு வகைகளும் உலகப்புகழ் பெற்றவைகளாக விளங்குகின்றன. கூட்டுறவு இயக்கம் மூலம் இத்தொழில்கள் பெரும்பயன் அடைகின்றன.

தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டில் தொழில்வளம் மிக்க ஐந்து மாவட்டங்களுள் ஈரோடு மாவட்டம் ஒன்று. மொத்தச் சிறு தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30000 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றால் 15 இலட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதலிடம் (20.2%) பெறுவது பருத்தித் துணிகள் உற்பத்தியாகும். (கைத்தறி, விசைத்தறி, ஆலை) இரண்டாவது இடம் உள்ளாடை - ஆயத்த ஆடை உற்பத்தியாகும் (18.7); மூன்றாம் இடம் உணவுப் பொருள் உற்பத்தியாகும் (11.4%); குடிநீர், சுவைநீர் உற்பத்தித் தொழில் மற்றும் கயிறு, நார்,சணல் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெறுகிறது.

பிரிவுகள்

தொழில்களை பெருந்தொழில், சிறுதொழில், குறுந்தொழில், கைவினைப்பொருள் உற்பத்தி எனப் பிரித்து அதற்கேற்ப அரசு உதவிகள் வழங்கப்படுகிறது. நூற்பாலைகள் (57), பொறியியல் கருவிகள் (3), சர்க்கரை ஆலை (3), எண்ணெய் பிழியும் ஆலை(1) உணவுப் பொருள் தயாரித்தல் (2), இரசாயனப் பொருள் தயாரித்தல் (3) ஆகியவை பெரிய தொழில்கள் ஆகும்.

ஆயத்த ஆடை, பருத்தி நூல்-கம்பளி-சணல் - பட்டு நெசவு, தோல் பொருள், கயிறு - கயிற்றுப்பொருள், இரத்தினக்கற்கள், ஊறுகாய் - மசாலா, தென்னை ஓலைத் தட்டிகள், பொரி, மரச்சாமான், பாத்திரம் மூங்கில் கூடைத் தொழில் சிறு தொழில்கள் ஆகும்.

ஆயத்த ஆடை, கைத்தறித்துணி, தோல் பொருள், ஊதுபத்தி, ஜமுக்காளம், பனைஓலைப் பொருள், சாம்பிராணி, அச்சு, நகை, மூங்கில்