பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

17


பெருந்துறை, அந்தியூர், ஈரோடு, தாராபுரம், காங்கயம், கரூர், சேவூர், பல்லடம், செங்கணாச்சேரி, நீலகிரி ஆகிய 15 தாலுக்காக்கள் அடங்கியிருந்தன.

பின்னர் சேவூர், டணாயக்கன்கோட்டை தாலுக்காக்கள் நீக்கப்பட்டன. ஈரோடு, காங்கயம், சத்தியமங்கலம் ஆகிய தாலுக்காக்கள் முறையே பெருந்துறையுடனும், தாராபுரத்துடனும், புதியதாக உருவாக்கப்பட்ட கோபிசெட்டிபாளையம் தாலுக்காவுடன் சத்திய மங்கலமும் இணைக்கப்பட்டு அவை மூன்றும் துணைத்தாலுக்கா எனப்பட்டது.

பல ஓலை ஆவணங்கள் "கோயம்புத்தூருச் சில்லா பெருத்துறை தாலுக்காவுக்குச் சேர்ந்த ஈரோடு கிராமம்" என்று குறிக்கின்றன. 1888ல் ஈரோடு மீண்டும் தாலூக்காவாகிப் பெருந்துறை ஈரோட்டோடு இணைக்கப்பட்டது, அந்தியூர் தாலுக்கா பவானியோடு இணைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் நீலகிரி தனி மாவட்டம் ஆனது. செங்கணாச்சேரி பாலக்காட்டோடு சேர்க்கப்பட்டது. கொள்ளேகால் கர்னாடக மாநிலத்திற்குச் சென்று விட்டது. கரூர் வட்டம் 1911ல் திருச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்படும்வரை கோயமுத்தூர் மாவட்டத்தோடு சேர்ந்திருந்தது.

1974ல் “மாநில நிர்வாக சீர்திருத்தக்குழு" புதிய மாவட்டங்கள் அமைப்பது பற்றிப் பல பரித்துரைகள் செய்தது. அதன் அடிப்படையில் 8.5.1976 மற்றும் 10.12.1976 ஆகிய நாள்களில் புதுதில்லியில் கூடிய மாநிலத் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பரப்பளவு, மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய மாவட்டங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

"மாநில வருவாய் ஆணையம்" கோயமுத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோட்டைத் தலைநகராக்கி புதிய மாவட்டம் அமைக்கப் பரிந்துரை செய்தது. மேலும் அந்த ஆணையம் தாராபுரத்திலிருந்து காங்கயத்தையும், கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலத்தையும் பிரித்துத் தனித் தாலுக்காக்கள் உருவாக்கவும் பரிந்துரை செய்தது.