பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

32. தமிழ் வளர்ச்சி


சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் தன் மிகச் சிறந்த பங்கைச் செலுத்தியுள்ளது.

சங்க காலம்

பெருந்தலைச் சாத்தனார், அந்தியிளங்கீரனார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஒரோடகத்துக் கந்தரத்தனார் போன்ற சங்கப் புலவர்கள் ஈரோடு மாவட்டத்துப் பெருந்தலையூர், அந்தியூர், பொம்முடி, காகம், உலகடம் ஆகிய ஊரைச் சேர்ந்தவர்கள் என ஆய்வாளர் கூறுவர்.

தேவாரம்

வெஞ்சமாங்கூடல், பாண்டிக்கொடுமுடி, கரூர், அவிநாசி, பவானி, திருமுருகன்பூண்டி, திருச்செங்கோடு முதலிய ஏழு கொங்கு நாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் பாண்டிக் கொடுமுடியும் பவானியும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன, திருஞானசம்பந்தர் பவானிக்கும், அவரும் திருநாவுக்கரசர், சுந்தரர் முதலிய மூவரும் பாண்டிக் கொடுமுடிக்கும் தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். தாராபுரம், பெருந்துறை, பூத்துறை போன்ற தேவார வைப்புத் தலங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.

திருவாசகம்

மாணிக்க வாசகர் தம் அகவல் பாடலில் "அரிய பொருளே

அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே" என்று பாடிப்பரவியுள்ளார். ‘பாண்டி வெள்ளமே' என்பது கொடுமுடியைக் குறிக்கும். மாணிக்கவாசகர் பெயரில் 'நிலைமண்டிய ஆசிரியப்பா' என்ற சிற்றிலக்கியம் பாடப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் வழியினர் தலைமை ஏற்கும் கூனம்பட்டித் திருமடம் இம்மாவட்டத்தில் உள்ளது. பல இலக்கியங்கள் மாணிக்கவாசகர் திருமடத்திற்கு உள்ளன.