பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

203


நல்லூரில் - அமரபுயங்கச் சதுர்வேத மங்கலம்
முகுந்தனூரில் - விக்கிரமசோழச் சதுர்வேத மங்கலம்
பிரமியத்தில் - வீரசங்காதச் சதுர்வேத மங்கலம்
கொளிஞ்சிவாடியில் - அரியபிராட்டிச் சதுர்வேத மங்கலம்
பிரமியத்தில் - உடைய பிராட்டிச் சதுர்வேத மங்கலம்
தரையனூர் நாட்டில் - வீரபாண்டியச் சதுர்வேத மங்கலம்

ஒரு கோயிலுக்கு ஊர் முழுமையும் அளிக்கப்பட்டிருந்தால் அவ்வூர், 'நல்லூர்' என்று பெயர் பெற்றது. சதுர்வேதி மங்கலம் போல நல்லூரும் அரசர் தொடர்பான பெயரையே பெற்றன.

அலங்கியம் ஆன உத்தமசோழ நல்லூர்
கொங்கூர் ஆன செயங்கொண்டசோழ நல்லூர் வெள்ளகோயில் ஆன சோழீசுவர நல்லூர்
தேரையூர் ஆன குலோத்துங்கசோழ நல்லூர்
மருதூர் ஆன அழகியசோழ நல்லூர்
வள்ளியறச்சல் ஆன வீரபாண்டிய நல்லூர்

இராகுத்தராய நல்லூர் இன்று 'நல்லூர்' என்று அழைக்கப்படுகிறது.

புராணங்களில்

ஈரோட்டுக்கு மறந்தை, உறந்தை, மயிலை கபாலபுரி, மத்யபுரி என்ற பெயரைப் புராணங்களிலும், சமய நம்பிக்கையால் கூறுவதிலிருந்தும் அறிகின்றோம். வேறு சில ஊர்களுக்கும் புராணங்களில் வேறு பெயர் கூறப்படுகின்றன. பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, ஈரோடு ஆகியவை ஓடைகளால் பெயர் பெற்றிருக்க இவைகளை இணைத்து புராணங்கள் வேறு பெயர்க்காரணம் கூறும்.

பூத்துறைப் புராண ஆசிரியர் மேல்கரை பூந்துறை நாட்டு 32 ஊர்களையும் பலவகைக் காரணப் பெயர்களாகப் பிரித்துக் கூறியுள்ளார்.