பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

ஈரோடு மாவட்ட வரலாறு


பலர் நிதி உதவியுடன், சில கட்டிடப் பகுதிகளையும் கட்டித் தருவதாக வாக்களித்தனர். சென்னை மாநில அரசு, இந்தியத் தேயிலைக் குழு, அஞ்சல் துறை, டாட்டா எண்ணெய்த் தொழிற்சாலை, தேயிலை - காப்பித் தோட்ட அதிபர்கள், தகராட்சிகள் ஆகியவையும் நிதி உதவி செய்து தாங்கள் பரிந்துரைப்போருக்குப் படுக்கைகள் ஒதுக்கக் கோரினர்.

மருத்துவமனைக்குரிய ஆணைகளை அரசு 13.8.1936; 22.11.1937இல் பிறப்பித்தது. மருத்துவமனை உருவானது.

ஈரோட்டில் பழைய தனியார் மருத்துவமனைகள்

1897இல் ஈரோட்டிற்குக் கிறித்துவ சமயப்பணிக்காக வந்த ஆஸ்திரேலிய A.W. பிரப் பாதிரியார் (இலண்டன் மிஷன்) 1909ல் ஒரு மருத்துவமனை ஏற்படுத்தினார். முதலில் இஸ்லாமியப் பெண்களுக்காகத் தொடங்கப்பட்டதால் கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்டு, 1961ல் தென்னிந்தியத் திருச்சபை மருத்துமனை ஆனது. அவரே சென்னிமலையில் 1922ல் போரில் இறந்த தன் மகள் ஹெர்பர்ட் பிரப் நினைவாக மருத்துவமனையைத் தொடங்கினார்.

'வைத்திய வள்ளல்' என்று பெயர் பெற்ற ஈ.வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் (தந்தை பெரியாரின் மூத்த சகோதரர்) தன் தந்தை வெங்கட நாயக்கர் பெயரால் தர்ம வைத்திய சாலையை 14.9.1934 அன்று ஈரோடு கச்சேரி வீதி 42ஆம் எண் இல்லத்தில் தொடங்கினார். இதனை நீலம்பூர் மகாராஜா தொடங்கி வைத்தார்.

15.9.1935 முதல் 14.9.1936 வரை ஓராண்டில் 5775 ஆண்கள், 2895 பெண்கள், 3256 ஆண் குழந்தைகள் மற்றும் 1733 பெண்குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையை அந்த மருத்துவமனை அளித்தது.

மருத்துவக் கல்வி

1924ஆம் ஆண்டு கோயமுத்தூரில் இந்திய மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டு LMP பட்டம் அளித்தது. ஆனால் அப்பள்ளி 1930இல் மூடப்பட்டது. 1933இல் ஈரோடு 'கோஷா ஆஸ்பத்திரி' செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியது. 1955இல் அரசு அப்பள்ளியை அங்கீகரித்தது.