பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

27


ஆண்டுகளில் ஈரோடு மாவட்டப் பகுதியில் விரிவான தொல்லியல் கள ஆய்வுப்பணி மேற்கொண்டு பல பெருங்கற்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் - தொல்லியல் துறை முன்னாள் தலைவர் முனைவர் கா.ராஜன் 1980 முதல் ஈரோடு மாவட்டத்தில் மேலும் பல பெருங்கற்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்தார்.

கொடுமணல் அகழாய்வுகள்

பதிற்றுப்பத்தில் கபிலரும், அரிசில் கிழாரும் தொழில் திறனுடன் வேலைப்பாடுமிக்க சிறந்த அணிகலன்களை உருவாக்கும் "கொடு மணம்" என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

"கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம்" (பதிற் 67)
"கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்" (பதிற் 74)

என்பன அப்பகுதியாகும்.

அச்சிறப்புமிகு பேரூர் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நொய்யலாற்றின் வடகரையில் "கொடுமணல்" என்ற பெயருடன் விளங்குகிறது. இம்மூதூர் கேரள மாநிலத்தில் பெரியாற்றின் வாயிலில் அமைந்திருந்த முசிறித் துறைமுகத்தையும், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்திருந்த கொங்குச் சேரர் தலைநகரான கருவூர் வஞ்சியையும் பாலக்காட்டுக் கணவாய் வழியாக இணைக்கும் வணிகப் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பேரூரின் புதையுண்ட எச்சங்கள் உள்ள பரப்பு வாழ்விடம், ஈமக்காடு என்று இருபெரும் பகுதிகளாக உள்ளது.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பண்டைய வாழ்விடமும் அதன் வடக்கிலும் கிழக்கிலும் 50 ஏக்கர் பரப்பளவில் ஈமக்காடும் பரவியுள்ளன. இங்கு 1985, 1986, 1989, 1990, 1997 ஆகிய ஆண்டுகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழக அரசு