பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

29


பதிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் ஆகியவை அங்கு கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் கிடைத்த பல்வேறு வகையான குறியீடுகளையும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புக்களையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

கண்ணன் ஆதன், குவிரன் ஆதன், அந்துவன் ஆதன், பண்ணன், வன்மூலன், சம்பன், கூலந்தை அகல், வருணிய அகல், சாத்தந்தை போன்ற பெயர்கள் கிடைக்கின்றன. ஆதன் என்ற பெயர் சேரர் தொடர்பைக் காட்டுகிறது. வணிகக் குழுவைக் குறிக்கும் நிகம, விஸாகி, குவிரன்,வருணில் போன்ற சொற்கள் கொடுமணல் வட இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்பை நன்கு உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலேயே அதிக எழுத்துப் பொறிப்புக்கள் உள்ள பானை ஓடுகள் கொடுமணலில் மட்டுமே கிடைத்துள்ளன.

உரோம் நாட்டு நாணயங்களும் அரிட்டைன், ரௌலடெட் என்ற உரோம் நாட்டு ஓடுகளும் அவர்களின் மதுக்குடங்களான அம்போராவின் மாதிரிகளும் உரோம்நாட்டுச் சூரியக் கடவுளான அப்பல்லோவின் சுடுமண் பொம்மையும் கொடுமணலில் கிடைத்திருப்பது உரோமானியர் தொடர்பை வெளிப்படுத்துகிறது. இங்கு செய்யப்பட்ட அரிய கல் மணிகளை மேற்குக் கடற்கரைக்கு மலைபடு பொருட்களை வாங்க வந்த உரோமானியர்கன் வந்து வாங்கிச் சென்றுள்ளனர். இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதி கொங்கு நாட்டு நொய்யல் கரையேயாகும். இப்பகுதியில் 1500க்கு மேற்பட்ட உரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன.

கரிப்பகுப்பாய்வு C14 முறைப்படி கொடுமணல் நாகரிகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சங்க காலத்திற்கு இணையான பெருங்கற்படைச் சின்னங்கள் காணப்படும் இடங்கள் பின் வருமாறு.