பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஈரோடு மாவட்ட வரலாறு


அவர்கள் மொழியில் காடு என்று பொருள். சோளகர் என்றால் “காட்டில் வாழ்பவர்கள்" ஆவர். சோளகர்களின் சகோதரர்களாகிய ஊராளிகள் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டம் காகாயனூர், தொட்டக் கொம்பை, வேதபாறை ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். லிங்காயத்துக்கள் மைசூர்ப் பகுதியிலிருந்து ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகட்குக் குடியேறியவர்கள்.

பாரம்பரிய வேளாண்மையும், வேளாண் கூலிப் பணியும் சோளகர்களின் முக்கியத் தொழில் ஆகும். வனத்துறையினரிடமிருந்து கடனாகப் பெற்ற நிலங்களில் கேழ்வரகு, அவரை, மொச்சை ஆகியவற்றைச் சாகுபடி செய்கின்றனர்.

இவர்கள் வனத்துறையிடமிருந்து பெற்ற நிலங்களுக்கு ஈடாக வனத்தைப் பாதுகாத்தல், செடிகள், நாற்று நடுதல், வனத்தூய்மை, பாதைகள் செப்பனிடல், விறகு எடுத்தல். காய்ந்த மரங்களைப் பிடுங்குநல், நீர் பாய்ச்சுதல் ஆகிய பணிகளைச் செய்கின்றனர்.

பர்கூர் கிராமத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஊசிமலை உள்ளது. ஓடு-புல் வேயப்பட்ட அரசின் இருபது குடியிருப்புக்களில் சோளகர் வாழ்ந்து வருகின்றனர். பர்கூர் சோளகர் போலவே இவர்கள் வாழ்க்கை முறையும் அமைந்துள்ளது.

ஓய்வு நேரங்களில் சிறு கொத்துடன் சென்று காடுகளில் நிலத்தைத் தோண்டி கிழங்கு வகைகளைச் சேகரித்து வேக வைத்து சோளகர்கள் உண்ணுகின்றனர். இவர்களின் முக்கிய உணவு தானியங்கள் கேழ்வரகு, சாமை, கம்பு ஆகும். கொடிவள்ளிக் கிழங்கையும் உண்பர். மிக அரிதாகக் கிடைக்கும் மூங்கில் நெல்லையும் குத்தி அரிசியாக்கி வேக வைத்து உண்பர்.

சில சமயம் காட்டிலுள்ள முயல், முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, கேலையாடு, பறக்கும் அணில், காட்டுக் கருங்குரங்கு ஆகியவைகளை மூங்கில் மற்றும் கயிற்றினால் ஆன வலை மூலம் பிடிக்கின்றனர். இவைகளின் தலையை வெட்டி இரத்தத்தைக் குடித்து விட்டு இரத்தம் உறையாமலிருக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பயன் பெறுகின்றனர்.