பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

ஈரோடு மாவட்ட வரலாறு


மகளாக இருக்கலாம். தாராபுரத்தின் பழைய பெயர் "பராந்தக புரம்" சேரன் வரகுண பராந்தகள் பெயரால் ஏற்பட்டதா என்பது ஆய்வுக்குரியது,

இதுவரை கிடைத்துள்ள கோ இரவி கோதையின் மூன்று செப்பேடுகளில் இரண்டு செப்பேடுகள் ஈரோடு மாவட்டத்தில் கிடைத்துள்ளன. ஈரோட்டிலும், பூந்துறையிலும் கிடைத்த அச்செப்பேடுகள் முறையே அனுமன்பள்ளிக்கும், ஈரோட்டிற்கும் உரியவை.

இரவிகோதை கருவூர் சித்திரா கூடத்தில் எழுந்தருளியிருக்கும்போது பூந்துறை நாட்டு அனுமன்பள்ளியை செல்லன் தேவன், வேம்பன் பண்ணன், நக்கன் முதலி என்ற மூன்று பேருக்குக் கொடையாகக் கொடுத்ததை ஈரோட்டுச் செப்பேடும். இரவிகோதை ஈரோடு பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் கொங்கு அரசனாக அபிஷேகம் செய்து கொண்டதை பூந்துறைச் செப்பேடும் கூறுகின்றன. இரவி கோதை "காவேரி வல்லவன்" என அழைக்கப்படுகிறான்.

பகைவரை வென்ற இரகுநாத சிங்கன் என்ற வீரருக்கு நீலம்பூரைக் (நிலம்பேரூர்) காணியாக வேணாடுடையார் கொடுத்த பிற்காலச் செப்பேட்டில் “வெள்ளாள மகாராசாவாகிய சேரராசா செங்கோல் செலுத்தி தர்மநீதி தப்பாமல் அரசு புரிந்து வரும் நாளில்" என்று எழுதிய ஒரு "மெய்க்கீர்த்தி" சேரரின் பெருமைகளையும் கொங்கு நாட்டுத் தொடர்பையும் விளக்கமாகக் கூறுகிறது.

"அக்கினி கோத்தின் அம்புலிக் குடையான்
பனைந்தார் மார்பன் பவள மாலிகையான்
அன்னக் கொடியான் ஆறுநன் மலையான்
கொல்லி மலையான் கோட்டைநற் கரையான்
வஞ்சிநற் பதியான வளர்பொன்னி யாறன்
ஆவிநன் குடியான் ஆன்பொருநை யாலயன்
விருதூர் வஞ்சியில் விளங்கிய கோமான்
வெள்ளிநற் பொருப்பு விளங்கும் தேவேந்திரன்
தலைமலை சூழ்ந்த களப்படை வீரன்
குளித்தலை அளவும் கொங்கன் ஆனோன்"

என்பது அச்செப்பேட்டு மெய்க்கீர்த்தியாகும்.