பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஈரோடு மாவட்ட வரலாறு


"அக்கினி கோத்திரம்" சேரமானுக்கு பூந்துறை, வெள்ளோட்டைச் சேர்ந்த வேளாளர்கள் முடி சூட்டியதாக வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது (எண்-49). கொங்கு வேளாளர்களிலும் சேர குலத்தார், அக்கினி குலத்தார் உண்டு.

"கேரளோற்பத்தி" என்ற சேர நாட்டு வரலாறு கூறும் மெக்கன்சியின் ஆவணம் சேரமான் பெருமாள் ராசா (சுந்தாருடன்) கயிலை செல்லுமுன் பூந்துறைக்கு வந்து மானீசன், விக்கிரமன் என்ற இரு சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்று சேரநாட்டில் இரண்டு இடங்களில் இருவருக்கும் முடிசூட்டியதாகக் கூறுகிறது.

காளியண்ணப் புலவர் பாடிய பூந்துறைப் புராணத்தில் சேரமான் வரலாற்றுச் சருக்கத்திலும் இதே செய்தி கூறப்படுகிறது. அழைத்துச் சென்ற சிறுவன் பெயர் மட்டும் வேறுபடுகிறது. பூந்துறைக் காடை குல நண்ணாவுடையார் வழிவந்த "வேலப்ப நயினார்" சேர மன்னனுடன் சென்று முடிசூட்டப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. ஈரோடு மாவட்டப் பூத்துறைக்கும் சேரமன்னர்கட்கும் உள்ள தொடர்பு மேலும் ஆய்வுக்குரியது.

கள்ளிக்கோட்டை மன்னர் சாமொரின் பரம்பரையினரின் பல்வேறு பட்டப் பெயர்களில் ஒன்று "பூந்துறைக் கோன்" என்பது. கேரள வரலாற்று ஆசிரியர்கள் பூத்துறை காவிரிக்கரையருகே இருப்பதாக எழுதியுள்ளனர்.