பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

20. இங்கிலாந்து மன்னர் காலம்


(கி. பி. 1858 - 1947)

1858 வரை கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கிலாந்து அரசின் அனுமதி பெற்று இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி புரிந்தனர். கும்பினிக்கு வருமானம் பெருகியது. கும்பினி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டன. இங்கிலாந்து அரசு இந்தியாவின் ஆட்சியை மேற்கொள்ள முடிவு செய்தது. கும்பினியார் அதை ஏற்றுக்கொண்டு 1.9.1958 அன்று கும்பினிக் கொடியை இறக்கி 'யூனியன் ஜாக்' என்ற இங்கிலாந்துப் பேரரசின் கொடியை ஏற்றி வணக்கம் செய்து நாட்டை இங்கிலாந்து அரசுவசம் ஒப்படைத்தனர்.

அதுமுதல் இங்கிலாந்து அரசர், அரசியாரின் பிறந்தநாள், முடி சூட்டிய நாள், பிற முக்கிய நாட்கள் அரசு விழாவாக டில்லியிலும் இதர இடங்களிலும் நடைபெற்றன. இங்கிலாந்து அரசர்கள் சிலர் டில்லி வந்தும் இந்தியாவின் அரசராகத் தம்மை முடி குட்டிக் கொண்டனர்.

டில்லியில் நடைபெறும் அரசரின் 'தர்பார்'களுக்கு இங்கிலாந்து ஆட்சியை ஆதரிக்கும் பிரமுகர்கள் அழைக்கப்பட்டனர். பலருக்கும் பலவிதமான கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 1877ஆம் ஆண்டு முடிகுடி அரசி ஆன விக்டோரியா மகாராணியின் முடிசூட்டு விழா டில்லியிலும் கொண்டாடப்பட்டது. வெள்ளிவிழா, பொன்விழா. வைர விழாக்களும் நடைபெற்றன.

1897ஆம் வருடம் விக்டோரியா மகாராணியின் பிறந்தநாள் வைரவிழா இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது. 8.6.1897 அன்று கோபிசெட்டிபாளையத்தில் உதவிக் கலெக்டர் ஜெ.ஜி.வுட் தலைமையில் நடைபெற்ற வைரவிழா நினைவாகத்தான் கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்திய நாணயங்களிலும் பதிவுப்பத்திரங்களிலும் அரசரின் உருவம் பொறிக்கப்பட்டது. பெரும் பொறுப்புக்களுக்கு ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்டனர்.