பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

45


ஆகவே உடம்பால் அழிகிறபோது மேலே கூறிய அத்தனை பயன்களையும் இழந்து போவீர்கள் என்று எச்சரித்த திருமூலர், கடைசியாக,

“உடம்பை வளர்த்தேன்

     உயிர் வளர்த்தேனே”

என்று பாடி முடிக்கிறார். உடம்பு என்பது உலக இன்பத்தைக் காட்டும் ‘வழிகாட்டி மரம்’ அல்ல. ஓரிடத்தில் நின்று கொண்டு பாதையைக் காட்டுகின்ற வழிப் போக்கனும் அல்ல. கூட இருந்தே குலத்தைக் காக்கும் குரு போன்றது.

எனவே ‘உடம்பு’ என்ற சொல்லைச் சொல்லுகின்ற போது, உடம்பைக் காக்கின்ற ஆசையும், ஆவேசமும் உடனே ஏற்பட வேண்டுமென்றுதான் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

உயிர் வளர்த்துக் கொள்வதற்குச் சுவாசப் பயிற்சி முக்கியம். அதாவது பிராணாயாமம் போன்றவை. உயிர் வளர்க்கக் காற்றுத் தேவை.

ஆனால் உடம்பை வளர்க்க எவையெவை தேவை. உடம்பை வளர்த்தல் என்பது, கண்டதைத் தின்று கொழுத்துச் சதை போட்டுக்கிடப்பது அல்ல. இயற்கையோடு மாறுபடாது, போராடி, எதிர்த்து நின்று, வெற்றி வாகை சூடிப் பாதுகாத்துக் கொள்வதுதான். நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும் கடைப்பிடித்து உடம்பைக் காப்பாற்றிக் கொள்வீராக.

☐☐☐